’’அரசு நிர்ணயித்த கூலி 11 ரூபாய்; கிடைப்பதோ 5 ரூபாய்!’’ - கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் | Fire work workers protest in Kovilpatti

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (08/02/2018)

கடைசி தொடர்பு:22:30 (08/02/2018)

’’அரசு நிர்ணயித்த கூலி 11 ரூபாய்; கிடைப்பதோ 5 ரூபாய்!’’ - கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள்

அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்சக் கூலி உயர்வினை வழங்கிட வலியுறுத்தி தீப்பெட்டித் தொழிலாளர்கள், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தார், விளாத்திகுளம், எட்டயபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி மற்றும் நெல்லை மாவட்டம் குருவிகுளம், சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டித் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. 

தீப்பெட்டித் தொழிலை நம்பி தமிழகத்தில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக இதில் ஈடுபடும் 90 சதவிகித தொழிலாளர்கள் பெண்கள்தான். இவர்களுக்குக் கடந்த 7 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. அட்டைப் பெட்டி பிரிவில் வேலை செய்பவர்களிடமிருந்து 160 பெட்டிகள் வாங்கப்படுகின்றன. இதில், 100 பெட்டிகளுக்குதான் கூலி வழங்கப்படுகிறது. இதற்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சக் கூலி பஞ்சப்படியுடன் 11 ரூபாய் 35 காசுகள். ஆனால், உற்பத்தியாளர்கள் ரூ.5 மட்டுமே கூலியாக வழங்குகின்றனர். இது அடிப்படைக் கூலியை விடக் குறைவு. இதைக் கண்டித்தும், கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு வெளியிட்ட அரசாணையின் படி, அரசு நிர்ணயித்துள்ள கூலியை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த ஒரு வாரமாகப் பல போராட்டங்களை தீப்பட்டி தொழிலாளர்கள் நடத்தி வந்தனர்.

இதனால் தீப்பெட்டித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூடி ஆலோசித்து, தொழிலாளர்கள் தற்போது வாங்கும் சம்பளத்திலிருந்து, 20 சதவிகிதம், கூலியை உயர்த்தி வழங்குவதாக அறிவித்தனர். இந்தக் கூலி உயர்வு வெறும் கண்துடைப்பு, தற்போது வாங்கும் 5 ரூபாய் சம்பளத்தில், 20 சதவிகிதம் என்றால் 1 ரூபாய்தான் உயர்வு. இதனை ஏற்க முடியாது எனத் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உற்பத்தியாளர்களின் கண்துடைப்பு கூலி உயர்வைக் கண்டித்தும், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலி கேட்டும்.நேற்று (7.2.2018) முதல் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று (8.2.2018)  தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, 600-க்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிலாளர்கள், ஊர்வலமாகச் சென்று கோவில்பட்டி  கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோட்டாட்சியர்  அனிதா, பேச்சுவார்த்தை நடத்தினார். உற்பத்தியாளர்கள், தொழிலாளர், ஆய்வாளர்களுடன் நாளை (9.2.2018) பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க