காற்றாலை நிறுவனத்துக்கு எதிராகக் கொந்தளிக்கும் கிராம மக்கள்!

விவசாயத்துக்குப் பயன்படும் குளத்தின் உள்ளே காற்றாலை அமைப்பதற்கு மின்கம்பம் நடும் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

காற்றாலை

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள இராமலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் இன்று (8.2.2018) மனு அளித்தனர். அதில், ‘நாங்கள் ராமலிங்கம்பட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறோம். விவசாயமும் கால்நடைகளும்தான் எங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளன. எங்களுடைய குடியிருப்பு அருகே சாயாமலை குளம் உள்ளது. இந்தக் குளத்தை நம்பியே சுற்றுப்புற கிராம மக்களின் விவசாயம் நடைபெற்று வருகிறது. 

அத்துடன், கால்நடைகளுக்குக் குடிநீர் ஆதாரமாக இருக்கும் அந்தக் குளத்தால்தான்எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. குளத்துக்குத் தண்ணீர் வரக்கூடிய நீராதாரங்களை எல்லாம் ஆக்கிரமித்து மின்கம்பங்களை நட்டுள்ள தனியார் காற்றாலை நிறுவனம், குளத்தின் உள்ளேயும் மின்கம்பங்களை நட நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் எங்கள் விவசாயத் தேவைக்குக் குளத்தில் தண்ணீர் தேக்குவதில் சிரமம் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. காற்றாலை நிறுவனத்தின் நடவடிக்கையால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தச் செயலை தடுத்து நிறுத்த வேண்டும். காற்றாலை நிறுவனம் அரசு நிலத்தையும் தனியார் நிலங்களையும் அத்துமீறி கையகப்படுத்துவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!