பாரதியார் பல்கலைத் துணைவேந்தர் பி.ஏ-விடம் துருவித்துருவி விசாரணை... கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல்! | Vigilance enquires Bharathiar University VC's PA Sulthan Beham

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (09/02/2018)

கடைசி தொடர்பு:08:49 (09/02/2018)

பாரதியார் பல்கலைத் துணைவேந்தர் பி.ஏ-விடம் துருவித்துருவி விசாரணை... கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல்!

பாரதியார் பல்கலைக்கழகத்தில், 9 மணி நேரம் சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக ஆவணங்களை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பாரதியார் பல்கலைக்கழகம்

உதவிப் பேராசிரியர் பணிக்காக, லஞ்சப் புகாரில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடைந்தையாக இருந்த வேதியியல்துறை பேராசிரியர் தர்மராஜ் மற்றும் மதிவாணன் ஆகியோரும் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு மோசடிகள் நடந்துள்ளதாகப் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப் போலீஸார், பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த புதன்கிழமை, பதிவாளர் வனிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டநிலையில், இன்றும் (வியாழக்கிழமை) பாரதியார் பல்கலைக்கழகத்தில்  விசாரணை நடத்தினர்.

குறிப்பாக, துணைவேந்தர் அலுவலகம், துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்தில், சுமார் 9 மணி நேரம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். மாலை 4.15 மணியளவில் தொடங்கிய விசாரணை, நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. அப்போது, துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் சுல்தான் பேகம், பதிவாளரின் நேர்முக உதவியாளர் சங்கர் மற்றும் அலுவலகப் பணியாளர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பாரதியார் பல்கலைக்கழகம்

இந்த விசாரணையின்போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் ஜெயகுமாரும் இருந்தார். முக்கியமாக, சுல்தான் பேகம்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு நேர்முக உதவியாளராக இருந்துவருகிறார். இதனால், பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து ஊழல்களுக்கும் சுல்தான் பேகமுக்கு முக்கியப் பங்குண்டு என்று பல்கலைக்கழக ஊழியர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

இதன் காரணமாகவே, சுல்தான் பேகத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கைதான கணபதியை  போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்காக, நீதிமன்றத்தில் லஞ்சஒழிப்புப் போலீஸார் இன்று வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்துள்ளனர். எனவே, கணபதியிடம் விசாரணை நடத்துவதற்காக, ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

சுல்தான் பேகம்

சுல்தான் பேகம்

அதேபோல, துணைவேந்தர் மற்றும் அவரது நேர்முக உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோரின் கணினிகளில் உள்ள விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.