பழங்குடியின மக்கள் குடியிருக்கும் வீட்டை காலிசெய்யத் துடிக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள்!

காரைக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பாக  உள்ள சேர்வார் ஊருணி கால்வாய் புறம்போக்கில், கடந்த 7 ஆண்டுக்கு முன்  குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றினர். அங்கு குடியிருந்தவர்களுக்கு, ஒ.சிறுவயல் சாலையில் உள்ள அரசு புறம்போக்கு நிலமான ராஜீவ்காந்தி நகரில் மாற்று இடம் வழங்கப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டன. சிலருக்கு பட்டா வழங்கப்படவில்லை.

இதனிடையே, தற்போது அங்கு வசிக்கும் கூலித்தொழிலாளர்களான 54 பேருக்கு மட்டும் வருவாய்த்துறை சார்பில் இடத்தை காலிசெய்யுமாறு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது. இதனால், அந்த 54 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள்களில் ஒருவரான  பாண்டி பேசும்போது, “காரைக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பாக குடியிருந்த எங்களை மாற்று இடம் வழங்குவதாகக் கூறி இங்கு குடியமர்த்தினர். கடந்த 7 வருஷத்துக்கும் மேலாக இங்கு வசித்துவருகிறோம். எங்கள் வீட்டுக்கு மேல்உயரழுத்த மின்கோபுர வயர்கள் செல்கின்றன. அதையொட்டி ஓட்டுவீடுகளில் வசித்துவருகிறோம். இந்த முகவரியில்தான் குடும்ப அட்டை, ஆதார்அட்டை, வாக்காளர் அட்டை பெற்றுள்ளோம். எங்கள் பிள்ளைகள், அருகிலுள்ள பேயம்பட்டி அரசு பள்ளியில் படிக்கின்றனர். தற்போது, வருவாய்த்துறையினர் திடீரென காலிசெய்யச்சொல்லி நோட்டீஸ் கொடுத்துள்ளனர். பழைய துணிவியாபாரம், கட்டட வேலை எனஅன்றாடம் வேலைபார்த்துப் பிழைப்புநடத்திவருகிறோம். எங்களை திடீரென காலி செய்யச்சொன்னால் எங்கே செல்வது?  எனவே, மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு குடியிருக்க நிலம் ஒதுக்கி, எங்களையும் குழந்தைகளின் வாழ்வையும் பாதுகாக்க வேண்டும் என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!