வெளியிடப்பட்ட நேரம்: 08:33 (09/02/2018)

கடைசி தொடர்பு:17:50 (09/07/2018)

''அண்ணா...நாங்க டூர் போறோமே!" - மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளின் அதிகாலைக் குதூகலம்

 


பார்வைத்திறன் குறைபாடுள்ள 35 மாணவிகளும் மாணவர்களும்  இன்று (9-02-2018) அதிகாலை ஐந்து மணிக்கு உற்சாகமும் குதூகலமுமாக சுற்றுலாவுக்குக் கிளம்பிய காட்சி, பார்ப்பதற்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.புதுக்கோட்டை நகரில், தமிழ்நாடு அரசின்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் பார்வையற்றோர் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை  35 மாணவர்களும் மாணவிகளும் படிக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஒருநாள் கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவார்கள்.

இந்த ஆண்டு பூம்புகார், தரங்கம்பாடி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்துச்செல்வது என முடிவுசெய்து, உரிய அனுமதிபெற்றுப் புறப்பட்டார்கள். ஆண்டுதோறும், உள்ளூரைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர், இலவசமாகத்  தனது பேருந்தைத் தந்து உதவுவார். அதேபோல,  பார்வைக்குறைபாடுள்ள மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக, புதுக்கோட்டை பிஷப் பாக்கியம் ஆரோக்கியசாமி கல்வியியல் கல்லூரியிலிருந்து ஐந்து மாணவர்கள், இந்தச் சுற்றுலாவில் தன்னார்வத்துடன் பங்கேற்றிருந்தனர். அவர்களை வழி அனுப்புவதற்கு வந்திருந்த நபர்களிடம் மாணவிகள் சிலர், "அண்ணா, நாங்க டூர் போறோமே... நீங்களும் வர்றீங்களாண்ணா"என்று கேட்டு தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள்.

'பார்வைக்குறையுடைய பள்ளி மாணவர்களுக்கு, இதுபோன்ற சுற்றுலா எப்படி உதவுகிறது' என்ற கேள்வியை இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விசித்ராவிடம் முன்வைத்தோம்.

'பார்வையுடைய ஒரு மனிதன், தான் நேரடியாகப்  பார்க்கும் காட்சியின் வழியாகவே 85 விழுக்காடு அறிவைப் பெறுகிறான். ஒரு குறிப்பிட்ட பொருளையோ, இடத்தையோ அறிந்துகொள்ள விரும்பும் பார்வையுள்ள ஒருவர், அவை தொடர்பான விளக்கப்படங்கள், காணொளிகளைப் பார்த்தாலே, அது அவர்களுக்கு ஏறக்குறைய சரியான புரிதலை ஏற்படுத்திவிடும். ஆனால், ஒரு பார்வைக்குறையுடையவர், தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை, இடத்தைத் தொடுதல் மூலமாகவே அறிந்துகொள்ள இயலும். அப்படி அவர் பெறும் அறிவைக்கொண்டு இந்த உலகைப் பற்றிய புரிதலை வளர்த்துக்கொள்ள முயல்வார். இதைக் கருத்துருவாக்கம் (conceptual) என்போம். பார்வைக்குறையுடையோரின் சிறப்பான கருத்துருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுபவை, சிறப்புப் பள்ளிகள். தற்போது தமிழகத்தில் பார்வைக்குறையுடையோருக்காக  10 பள்ளிகளை தமிழக அரசு  நடத்திவருகிறது. அத்தனை பள்ளிகளும், ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற சுற்றுலாக்களுக்கு தங்களது மாணவர்களை அழைத்துச்செல்ல அனுமதி அளித்துள்ளது.

பார்வைக்குறையுடைய மாணவர்களுக்கு, இதுபோன்ற கல்விச் சுற்றுலாக்கள் தன்னம்பிக்கை  அளிப்பதாக உள்ளன. சுற்றுலாத் தலங்களில் உடன்வரும் பார்வையுள்ளவரின் உதவியோடு, இடம் தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்வார்கள். அங்கு காணப்படும் புடைப்புச் சிற்பங்கள், கல்தூண்கள், சிலைகளைப் போன்றவற்றைத் தொட்டுப்பார்த்து, தங்கள் அறிதலை வளர்த்துக்கொள்வார்கள். இது போன்ற சுற்றுலாக்களை ஒவ்வொரு பார்வைக்குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளியிலும் முதல்வகுப்பு முதலாகவே ஆண்டுதோறும் மேற்கொள்வது,  அவர்களின் கருத்துருவாக்கத்தை செழுமைப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கிறது.

உணவு, உடை, போன்ற உதவிகளைப் பொதுமக்களும் கொடுத்து உதவுவதுடன் நின்றுவிடாமல், இதுபோன்ற சுற்றுலாக்களுக்கு உதவலாம். இவர்கள்மீது கருணை என்ற பெயரில் பரிதாபம்கொள்வதைத் தவிர்த்து, திறந்த மனதுடன் இயல்பான உரையாடலையும் உறவாடலையுமே இதுபோன்ற மாணவர்கள் பொதுமக்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்' என்றார்.