வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (09/02/2018)

கடைசி தொடர்பு:13:23 (09/02/2018)

`எய்ம்ஸ் விவகாரத்தில் விரைவாக முடிவெடுங்கள்!' தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம்!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக, விரைவாக முடிவெடுக்குமாறு தமிழக சுகாதாரத்துறைக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது. 

தமிழகத்தில், ரூ.2 ஆயிரம் கோடியில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் செங்கிப்பட்டி, ஈரோடு – பெருந்துறை மற்றும் மதுரையை அடுத்த தோப்பூர் ஆகிய 5 இடங்களைத் தேர்வுசெய்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு பரிந்துரைத்தது. அந்த இடங்களை மத்திய அரசின் குழுவினரும் பார்வையிட்டுச் சென்றனர். மத்திய அரசும், தமிழக அரசு தேர்வுசெய்யும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்துவிட்டது.  ஆனால், திடீரென ஆளுங்கட்சி அமைச்சர்கள் சிலர், எய்ம்ஸ் மருத்துவமனையைத் தங்கள் பகுதியில் அமைக்க வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியதால், அதற்கான இடம் இறுதிசெய்யப்படாமல் இருந்துவருகிறது. 

இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பொதுநல வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எய்ம்ஸ் விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக சுகாதாரத்துறைக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய சுகாதாரத்துறைமூலம் இந்தக் கடிதத்தை தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பியுள்ளது. இதேபோல தமிழக அரசுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளதாக பொதுநல வழக்கு தாக்கல்செய்துள்ள ரமேஷுக்கும் மத்திய அரசு பதில் கடிதம் அனுப்பியுள்ளது. 

முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை என்றும் வரும் 2022க்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடைந்துவிடும் என்றும் மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை இன்று தகவல் தெரிவித்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க