வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (09/02/2018)

கடைசி தொடர்பு:12:40 (09/02/2018)

கடனுக்காகக் குழந்தைகளைக் கடத்திய மகளிர் சுய உதவிக்குழு தலைவி! வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட தாய்

மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலைச் சேர்ந்தவர், கணேசன். இவர், ஹோட்டலில் வேலைசெய்துவந்தார். இவரது மனைவி தொந்தீஸ்வரி (21) அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை வறுமையின் காரணமாக கட்டமுடியவில்லை. எனவே, தொந்தீஸ்வரி தன்னுடைய இரண்டு குழந்தைகளையும்  அழைத்துக்கொண்டு கலியனேந்தலில் இருக்கும் தாய் நாகவள்ளி வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆனாலும், மகளிர் சுய உதவிக்குழு நடத்திவரும் வீராயி, இவர்களைக் கந்து வட்டிக்காரனைவிட மோசமாக நடத்தியிருக்கிறார். குழுவுக்கு பணம் கட்டமுடியாமல் பயந்து தாய் வீட்டுக்குப்போன தொந்தீஸ்வரியை ஆட்டோவில் ரவுடிகளைப் போல தேடிப் போய்,  இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது தாய் நாகவள்ளி, தந்தை சுந்தரலிங்கத்தையும் ஆட்டோவில் கலியனேந்தலிலிருந்து கடத்திவந்து, கொம்புக்காரனேந்தலில் உள்ள தொந்தீஸ்வரி வீட்டில் மூன்று நாள்கள் அடைத்து வைத்துள்ளனர்.

பணம் கொடுத்தால் மட்டுமே இவர்களை விடுவோம்; இல்லையென்றால் விடமுடியாது என்று சொன்னதும் பணத்தைக் கட்ட வேறு வழியில்லாமல்,  தொந்தீஸ்வரி கலியனேந்தலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தகவல், பழையனூர் போலீஸாருக்குத் தெரியவந்துள்ளது. உடனே, மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தொந்தீஸ்வரி உடலைக் கொண்டுவந்துள்ளனர்.
உலகமே தெரியாத தாய் தந்தை, ஒன்றும் புரியாமல் நிற்கும் பச்சிளம் குழந்தைகள். இவர்களைப் பார்ப்போர் எல்லாம் கனத்த இதயத்துடனே செல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க