ராமஜெயம் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் நேரு குடும்பத்தாரிடம் சிபிஐ விசாரணை? | cbi enquiry with K.N.Nehru family members

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (09/02/2018)

கடைசி தொடர்பு:13:00 (09/02/2018)

ராமஜெயம் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் நேரு குடும்பத்தாரிடம் சிபிஐ விசாரணை?

ராமஜெயம் கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தாரிடம் சிபிஐ விசாரணைசெய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், 2012-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தில்லைநகரில் நடைப்பயிற்சி சென்றபோது, காரில் கடத்தி கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில், கொலைக்கான காரணம்... கொலையாளிகள் யார்? என்பதை இதுவரை விசாரித்த தமிழக போலீஸார், சிபிசிஐடி உள்ளிட்டோரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக, ராமஜெயத்தின் மனைவி லதா, சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் நம்பிக்கையில்லை என உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு,  சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
 
அதைத் தொடர்ந்து, வழக்கின் கோப்புகள் சிபிசிஐடி வசமிருந்து சிபிஐ போலீஸார் வாங்கினர். அதையடுத்து, சிபிஐ இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் என்பவர் தலைமையிலான போலீஸார், கடந்த  சில நாள்களுக்கு முன் திருச்சி வந்தனர். அடுத்து, ராமஜெயம் உடல் கிடந்த இடத்திலும் ஆய்வுசெய்ததுடன், ராமஜெயம் வீட்டுக்குச்  சென்று இதுகுறித்து விசாரித்தனர். அடுத்து, முன்னாள் அமைச்சர் நேரு எம்.எல்.ஏ, ராமஜெயத்தின் மனைவி லதா உள்ளிட்டவர்களை சென்னைக்கு நேரில் அழைத்து விசாரணை நடத்தியதாகக் கூறப்பட்டது.
 
இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கில் நேருவிடம் விசாரணை எனச் செய்திகள் பரபரக்க ஆரம்பித்தது. இந்நிலையில் நேரு குடும்பத்தினர், 'ராமஜெயம் கொலை வழக்கில் புகார்தாரர் என்கிற முறையில், சிபிஐ முதல்கட்டமாக வழக்கின் உண்மை நிலவரம் குறித்து தெரிந்துகொள்ளவே இந்த விசாரணை. மாறாக, நேருவிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி என்பதுபோல ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். இதுவரை, போலீஸார் எங்கள் குடும்பத்தைத் தாண்டி விசாரணையைக் கொண்டுசெல்லவில்லை. அதனால்தான் இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. அதைப்போன்று, தற்போதும் நடந்துவிடக்கூடாது' என்கிறார்கள்.