`நாளை ஒரு மிகப்பெரும் பதவிக்கு வரலாம்' - குழந்தைத் தொழிலாளியை மீட்ட அதிகாரிகள்

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் பணியாற்றிவந்த 12 வயதுடைய  குழந்தைத்  தொழிலாளியை அதிகாரிகள்  மீட்டு அழைத்துவந்தனர்.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 13-வது தெருவில் மளிகைக்கடை நடத்தி வருபவர் பாண்டி. இவரது கடையில் ராமநாதபுரம் அருகே உள்ள செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜூ என்பவரது மகன் கனிதீபன் (12) என்ற சிறுவன், குழந்தைத் தொழிலாளியாகப் பணிசெய்து வருவதாக, ராமநாதபுரம் சைல்டுலைன் அமைப்பினருக்குத் தகவல் வந்தது. இத்தகவலின் பேரில், சைல்டுலைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி துரைமுருகன், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் விஸ்வநாதன், உதவி ஆய்வாளர்கள் புஷ்பராஜ், கதிரவன், மனித வர்த்தகக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகசாந்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட மளிகைக்கடையில் ஆய்வுசெய்தனர்.

 இந்த ஆய்வின்போது, மளிகைக்கடைக்குள் சிறுவன் கனிதீபன் வேலை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அச்சிறுவனை மீட்டு, வெளியில் கொண்டுவந்தனர். இதுகுறித்து மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி எஸ்.துரைமுருகன்...  'சிறுவர்களைக் கடைகளில் வேலைக்கு அமர்த்தக்கூடாது.  அவர்கள், தங்கள் படிப்பைப் பாதியில் நிறுத்த கடைக்காரர்கள் காரணமாக இருந்து விடக்கூடாது. இன்றைய சிறுவன் நாளை ஒரு மிகப்பெரும் பதவிக்கு வரலாம். எனவே எந்த வர்த்தக நிறுவனமும் சிறுவர்களை பணிக்கு அமர்த்தக் கூடாது'' என்று மளிகைக்கடை உரிமையாளர் பாண்டிக்கு அறிவுரை வழங்கினார். பின்னர், சிறுவன் கனிதீபனை குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவினரிடம் ஒப்படைத்து, அவன் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!