வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (09/02/2018)

கடைசி தொடர்பு:15:31 (09/02/2018)

கடல்வளம் அழிவுக்குத் துணைபோகும் மீன்துறை அதிகாரிகள்! - தர்ணாவில் நாட்டுப்படகு மீனவர்கள்

கடல் வளத்தை அழிக்கும் விசைப்படகு மீனவர்களுக்கு, அதிகாரிகள் உடந்தையாகச் செயல்படுவதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாகவும் கூறி, நாட்டுப்படகு மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மீன் துறை அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட மீனவர்கள்

விசைப்படகு மீனவர்கள், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால், கடல்வளம் அழிந்து கொண்டிருக்கிறது. கடற்கரையோரங்களில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்ற விதிமுறையை மீறி மீன்பிடிப்பதால், நாட்டுப்படகு மீனவர்கள் அப்பகுதிகளில் விரித்து வைத்துள்ள மீன்பிடி வலைகளைச் சேதப்படுத்திவிடுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், விசைப்படகு மீனவர்களுக்கு உடைந்தையாக மீன்வளத்துறை அதிகாரிகள் செயல்படுவதாகவும் இதனால் கடல் வளம் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் நாட்டுப்படகு மீனவர்கள் கூறிவந்தனர். விசைப்படகு மீனவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்த நிலையில், இருதரப்பினரையும் அழைத்துப் பேசுவது என மீன்வளத்துறை அதிகாரிகள் முடிவுசெய்து, அதன்படி  நேற்று மாலை மீன்வளத்துறை அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இரு தரப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், முதலில் விசைப்படகு மீனவர்களை அழைத்துப் பேசி விட்டு, அதன் பின்னர் நாட்டுப்படகு மீனவர்களை அழைத்துப் பேசுவதாக அதிகாரிகள் கூறியிருந்தனர். இதன் காரணமாக, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலக வாயிலில் காத்திருந்தனர். பின்னர் நாட்டுப்படகு மீனவர்களிடம், கூட்டம் ஒரு வாரத்துக்குப் பிறகு நடத்தப்படும் எனவும் தெரிவித்ததால், திடீரென அவர்கள் மீன்வளத்துறை அலுவலகம் முன்பாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரும் வரை அந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்துத் தகவலறிந்த மீன்வளத்துறை துணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார், நாட்டுப்படகு மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இன்று மாலை 4 மணிக்கு ஒரு நிரந்தர முடிவு எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து, நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்துசென்றனர்.