வெளியிடப்பட்ட நேரம்: 13:54 (09/02/2018)

கடைசி தொடர்பு:13:54 (09/02/2018)

`சிறையில் சுடு தண்ணிகூட கொடுக்க மறுக்கிறார்கள்'- நீதிபதியிடம் குமுறிய கணபதி

துணைவேந்தர் கணபதி.

லஞ்ச வழக்கில் கைதான பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதி கேட்டு, கோவை ஊழல் வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று  தாக்கல்செய்திருந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது.

'ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள், நீதிமன்ற நீதிபதி ஜான்மினோ விடுப்பில் இருப்பதால், வழக்கைத் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகர் விசாரித்தார், 'ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட துணைவேந்தர் கணபதி,  நீதிமன்ற நுழைவுவாயிலில் நின்றுகொண்டிருந்த ஊடகங்களைப் பார்த்ததும் கோபம் கொப்பளித்தார், 'மனசாட்சியோடு எழுதுங்கள். நானும் மனுஷன்தான். உங்களுக்கும் பிள்ளை குட்டிகள் இருக்கும்; மறந்துடாதீங்க. எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதாதீர்கள்' என்று ஆதங்கம் வெளிப்படுத்தியபடியே நடந்துவந்த கணபதியை சட்டென்று கோர்ட்டுக்குள் கொண்டுசென்றது போலீஸ்.

'உங்களை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கு போலீஸார் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்' என்று  நீதிபதி  சொல்ல, தெரியும் என்பதைப்போல  தலையை ஆட்டினார் கணபதி.  இறுக்கமான முகத்துடன், 'மீடியா பொய்யான தகவல்களை எழுதி பூதாகரமாக்கிவிட்டார்கள். நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு சிறைக்குள் ஏகப்பட்ட கெடுபிடிகள் கொடுக்கிறார்கள். சுடு தண்ணிகூட கொடுக்க மறுக்கிறார்கள். நான் சீனியர் சிட்டிசன். சிறைக்கைதிகளுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படை வசதிகள்கூட எனக்கு கிடைக்கவில்லை' என்று நீதிபதியிடம் குமுறலுடன் முறையிட்டார்.

அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நீதிபதி, 'உங்களுக்கு சுடு தண்ணீர் கொடுப்பதற்கு ஆவண செய்கிறேன். மற்ற விஷயங்களை, உங்கள் வழக்கை விசாரிக்கும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜான்மினோ அவர்களிடம் முறையிடுங்கள்' என்று சொன்ன நீதிபதி, கணபதியை காவலில் எடுத்து விசாரிக்கும் மனு மீதான விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார். 

வக்கீல், போலீஸ் படை சூழ வெளியேறிய கணபதி, சற்று நேரம் நீதிமன்றக் கதவுக்கு வெளியே போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் அமர வைக்கப்பட்டார். ஒத்திவைப்பு உத்தரவுக் கடிதத்தை வாங்குவதற்குப் பரபரத்தார்கள் போலீஸ்காரர்கள். இரண்டு கைகளையும் பெஞ்ச்சில் ஊன்றி வெளிறிய முகத்தைக் கீழே கவிழ்த்தபடி அமர்ந்திருந்த கணபதி, இடையிடையே தன் அருகே வைக்கப்பட்டிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து 'கபக் கபக்' என்று குடித்தார்.  பதற்றத்தில் அவர் கைகள் நடுங்கின. அப்போது ஓடிவந்த அவருடைய மகன், இரண்டு போலீஸ் தோள்களுக்கு இடையே முகத்தை நுழைத்து, 'அப்பா... நீங்க எதுக்கும் கலங்காதீங்க.' வீட்டை நான் பாத்துக்கறேன். நீங்க எதுக்கும் கலங்காதீங்கப்பா… தைரியமா இருங்க' என்று தைரியம் சொல்லிவிட்டு அவசரமாக நீதிமன்றத்தைவிட்டு வெளியேறினார்.

மகன் கொடுத்த தைரியத்தோடு போலீஸாரால் வெளியே  அழைத்துவரப்பட்டார் கணபதி. ' உள்ளே நுழையும்போது இருந்ததைவிட கூடுதலான சத்தத்துடன் ஊடகங்களை விமர்சிக்க ஆரம்பித்தார். கைகளை மேலே உயர்த்தி, 'நான் மீண்டு வருவேன். மனசாட்சியோடு எழுதுங்கள்' என்று அழுத்திச் சொல்லியபடியே நடந்துவந்த கணபதியை வேனில் ஏற்றி அழைத்துச்சென்றது போலீஸ்.