மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தத் தடை! உயர் நீதிமன்றம் உத்தரவு

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் குறிப்பிட்ட உயர் அதிகாரிகளைத் தவிர மற்ற நபர்கள் செல்போன் கொண்டுசெல்லக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாரிகளும் பொதுமக்களும் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில், மாவட்ட உயர் அதிகாரிகள் அனைவரும் அன்று இரவு முழுவதும் அங்கிருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதும் பொதுமக்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின்மீது கோபத்தை வெளிப்படுத்தினர். கோயில் இணை ஆணையர் கோயிலுக்கு வருமானம் சேர்க்கும் பணியை மட்டும் செய்தார் எனக் குற்றம்சாட்டினர்.

அதைப்போலவே மாவட்ட ஆட்சியரும் பாதுகாப்பில் முன்னேற்றங்களைக் கொடுக்கவில்லை எனத் தனது அறிக்கையைக் கொடுத்தார். கோயிலில் முறையான பாதுகாப்புக் குடிநீர் வசதி, கழிப்பறை, பாதுகாப்பு வசதி இல்லாத சூழ்நிலை இருந்துவருகிறது. இந்நிலையில் ஆன்மிக சம்பந்தமான அதிக வழக்குகளில் தொடர்ந்து வாதாடிவரும் வழக்கறிஞர் முத்துக்குமார், மீனாட்சியம்மன் கோயில் பாதுகாப்புத் தொடர்பாகவும் அதன் நிலையின் அறிக்கை தெரிந்துகொள்ளும்படியான ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், தாரணி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "மீனாட்சியம்மன் கோயிலுக்குள் குறிப்பிட்ட உயர் அதிகாரிகளைத் தவிர மற்ற நபர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்றும், கோயிலின் உறுதித்தன்மை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் கோயில் வளாகத்தில் அதிக அளவு கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்தவும் கோயிலைச் சுற்றி நான்குபுறமும் கட்டடங்கள் ஒன்பது மீட்டருக்கும் அதிகமாக இருந்தால் அதை அகற்ற மாநகராட்சி கமிஷனர், ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியப் பாதுகாப்புப் படையைப் பாதுகாப்பில் உட்படுத்த மாநில அரசு, மத்திய அரசிடம் கோர வேண்டும்'' எனப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!