வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (09/02/2018)

கடைசி தொடர்பு:15:51 (12/02/2018)

``என் பேரு எடப்பாடி'' - பத்திரிகையாளர்கள்மீது பாய்ந்த ஹெச்.ராஜாவின் சகோதரர்

சுந்தர்

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் சகோதரர் சுந்தர் உட்பட 21 அதிகாரிகள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக்கொண்டனர். விசாரணை முடிந்து வெளியே வந்த சுந்தரைப் பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது அவரைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த விகடன் புகைப்படக்காரர் மணிகண்டனை அடிக்கப்பாய்ந்ததுடன், அவரது பெயரைக் கேட்ட பத்திரிகையாளர்களிடம் தன் பெயர் எடப்பாடி எனக் கூறிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் நடைபெற்ற தி.மு.க ஆட்சியின்போது, போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் 32.84 லட்சம் ரூபாயை, அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கும்பகோணம் கோட்ட மேலான் இயக்குநர் ராஜி, ராஜேந்திரன், வெங்கடாசலம், உள்ளிட்ட 19 பேர் முறைகேடு செய்ததாகத் தஞ்சாவூரைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளரும் அப்போதைய அண்ணா தொழிற்சங்க மாவட்டப் பொருளாலருமான கோவிந்தராஜன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரை, அடுத்து வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு சீரியஸாகப் பார்த்தது. இதனால், இந்த வழக்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில், தன் புகார் மீதான விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக்கூறி  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோவிந்தராஜன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து, முதல் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்ட கே.என்.நேரு உள்ளிட்ட 19 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். வழக்கு விசாரணையின்போதே ராஜி என்பவர் இறந்துவிட்டார்.

இதனிடையே லஞ்ச ஒழிப்புப் போலீஸார், அப்போது அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்தில் தலைமைக் கணக்கு அதிகாரியாக இருந்துவந்த சுந்தர், சிவக்குமார், அண்ணாதுரை உள்ளிட்ட மேலும் 4 பேருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுந்தர், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் உடன்பிறந்த இளைய சகோதரர் ஆவார். அவர் ஓய்வுபெறும் நாளில், கடந்த மார்ச் 31-ம் தேதிக்கும் முதல்நாள் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்ட சுந்தர், போக்குவரத்துத் துறையில் நடந்த ஊழலுக்கு துணைபோனதாகவும், முறைகேடுகளில் இவருக்குத் தொடர்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் சுந்தர், "தான் பி.ஜே.பி-யின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் சகோதரர்" எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், தவறு செய்ததாக ஆதாரங்கள் உள்ளதால் இவர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு எதிராகக் கோவிந்தராஜன் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகக் கூறியுள்ளார்.


மேலும், இன்று இந்த வழக்கில் ஹெச்.ராஜாவின் தம்பி சுந்தர் உள்ளிட்ட 21 பேர், நேரில் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் ஆஜரானார்கள். டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார், குற்றப்பத்திரிகையைத் திறந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொண்டவர்கள், மாற்றுவழியில் தனித்தனியே அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். அப்போது அவர்களைப் புகைப்படக்காரர்கள் போட்டோ எடுக்க முயன்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சுந்தர், குற்றம்சாட்டப்பட்டவர்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த விகடன் புகைப்படக் கலைஞர் என்.ஜி.மணிகண்டனைத் தாக்க முயன்றார். இதையடுத்து புகைப்படக்காரர், உங்கள் பெயர் என்ன எனக் கேட்டபோது தன்னுடைய பெயர், எடப்பாடி என்றபடி கிளம்பினார். புகைப்படக்காரரை ஹெச்.ராஜாவின் தம்பி அடிக்கப் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க