வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (09/02/2018)

கடைசி தொடர்பு:14:46 (09/07/2018)

``ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உளவியல் பயிற்சி அவசியம்!" - உளவியல் விரிவுரையாளரின் எச்சரிக்கை

கடந்த வாரம்  வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் பள்ளித் தலைமையாசிரியர் பாபுவை  மாணவன் ஹரிஹரன் கத்தியால் குத்திய சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் தங்களது பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் பெண் ஆசிரியர்களிடம் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான தங்களது எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நேற்றும் இன்றும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்குச் சென்று இருக்கிறார்கள். இதுதவிர, அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து அறவழி போராட்டங்களையும் நடத்தத் திட்டமிட்டு வருகிறார்கள். இந்நிலையில், 'இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இப்படியான வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க என்ன மாதிரியான முன்னெடுப்புகளை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்?' என்ற கேள்வியை   விருதுநகரில் உள்ள பாலையம்பட்டியில் இயங்கி வரும் மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் முதுநிலை உளவியல் விரிவுரையாளரான கு.வெள்ளைத்துரையிடம் முன்வைத்தோம்.

"ஆசிரியர்கள் தங்களது துறை அல்லது பாடத்தில் மட்டும் சிறந்த அறிவு பெற்றிருந்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு வகுப்பறை உளவியல் தேவை. மாணவர்கள் ஒழுங்கு மீறி ஏன் நடக்கிறார்கள், அதனை தடுப்பது எப்படி என்ற பணி சார்ந்த வழிகாட்டுதல் அவர்களுக்குத் தேவை. பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் மாணவர் உறவு மேம்பட உளவியல் கவுன்சலிங் மையம் ஒன்றினைப் புதிதாக  ஏற்படுத்த வேண்டும். அங்கு மாணவரோடு நெருங்கிப் பழகும் உளவியல் ஆசிரியரை கவுன்சிலராக நியமித்து, மாணவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும். மாணவர்கள் எந்த அளவுக்கு வகுப்பறையில் மதிப்படுகிறார்களோ அந்த அளவில்தான் கற்றல் சாத்தியமாகிறது. எது தவறு என்பதன் மீதே கவனம் செலுத்தும் தண்டனை கல்வியைவிட சரியான நடத்தையைத் தேடி, பாராட்டி, மாணவர்களை உயர்த்தும் முன் உதாரண கல்வியே சிறந்தது. முதலில் ஆசிரியர்கள்மீது மாணவர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும்.

மாணவர்களின் பெற்றோர்களிடமும் ஆசிரியர் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். அதுபோல், தனியாள் வேறுபாடு உள்ள மாணவர்களுக்கு அதாவது, சாதி, சமுதாய ரீதியில் சக மாணவர்களால் தனித்துவிடப்படும், ஒதுக்கப்படும் மாணவர்கள் மீது ஆசிரியர்கள் தனி கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். பள்ளிகளில் அதிகப்படியான விழாக்களை சமூகத்தோடு இணைந்து கொண்டாட வேண்டும். அப்போதுதான் சமூகத்துக்கும் பள்ளிக்கும் ஆசிரியருக்கும் நெருக்கம்  ஏற்படும். ஆசிரியர் என்பவர் மாணவரை நேசிப்பவராக மட்டும் அல்லாமல் மாணவரால் நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை மட்டும் கூறாமல் புதுப்புது தகவல்களைக் கூறுபவராக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நற்பண்புகள், சுயமரியாதை, தன்னம்பிக்கை ஒழுக்கம், ஆன்மிகம், பொது விஷயம் என அனைத்தையும் கூறவேண்டும். ஒவ்வொரு நாளும் வகுப்பறையில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளைப் பற்றி மாணவர்களே தங்களது பெற்றோர்களுக்கு ஆர்வமுடன் தெரியப்படுத்தும்படி ஆசிரியர்களது நடவடிக்கைகள் இருக்க வேண்டும். பாட இணைச் செயல்பாடுகளில் மாணவர்களை ஆர்வப்படுத்தி, அவர்களை முழுமை அடையச் செய்தால் தானாகவே கற்றலில் தனது திறமையை வளர்த்துக்கொள்வார்கள். ஆசிரியர்கள் மீது  மாணவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நிகழாமல் இருக்க, மாணவர்களை தன் வயப்படுத்துவதற்கான முன் முயற்சிகளை ஆசிரியர்கள்தான் வடிவமைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன், நான் முன்பே குறிப்பிட்டது போல், உளவியல் ரீதியான பயிற்சி  ஆசிரியர்களுக்கு அவசியம் தேவை. பிரச்னைகளுக்குரிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை உளவியல் ரீதியாக அணுகினாலே மாணவர்கள் ஆசிரியர்களுக்கிடையேயான வன்முறைச் சம்பவங்களை நிச்சயமாக தடுக்கலாம்" என்றார்.