உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் ஜீயர்! பின்னணி இதுதான்

ஆண்டாளை இழிவுபடுத்திய வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நேற்று முதல் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கிய சடகோப ராமானுஜர் ஜீயர், சற்று முன் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது அவருடைய போராட்டத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

ஜீயர்

ஆண்டாள்- வைரமுத்து சர்ச்சை ஏற்பட்டபோது, ஜீயரின் போராட்டத்துக்கு இந்து அமைப்புகள் ஆதரவு கொடுத்தன. இதனால் பல ஊர்களுக்குச் சென்று போராட்டம் நடத்தினார். இடையில் சோடா பாட்டில் வீசத்தெரியும் என்று அவர் பேசியது கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது. இந்த நிலையில் வைரமுத்து வந்து மன்னிப்பு கேட்க பிப்ரவரி 3 ம் தேதி வரை கெடு விதித்தார் ஜீயர். அதற்கு வைரமுத்து எந்த பதிலும் சொல்லாததால் மூன்றாம் தேதி ஜீயர் வெளியூர் சென்று பல பிரமுகர்களைச் சந்தித்தார். 

இந்த நிலையில் நேற்று காலை பத்து மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் செருக்கூர் திருமண மண்டபத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஜீயர். இவர் உண்ணாவிரதம் இருக்கும் தகவல் தெரிந்தும், பொதுமக்கள், சமூக அமைப்புகளோ, இந்து இயக்கங்களோ யாரும் வரவில்லை. மடத்திலிருக்கும் சிலர் மட்டும் அவருடன் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

இந்த நிலையில் அவர் உண்ணாவிரதம் இருப்பதை பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள். நேற்று தூத்துக்குடி வந்த சாமித்தோப்பு அய்யா வழி பாலபிரஜாபதி அடிகள், " அஜீரணக் கோளாறால் ஜீயர் உண்ணாவிரதம் இருக்கிறார் " என்று விமர்சித்தார். இன்னும் சில மடாதிபதிகளும் விமர்சித்தனர். இந்நிலையில் அவர் உண்ணாவிரதம் இருக்கும் மண்டபம் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திருமணத்துக்கு புக் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மண்டபத்தை வழங்கவில்லை என்றால் பிரச்னை ஆகும் என்பதால், உண்ணாவிரதத்தை தொடர்வதா, முடிப்பதா என்ற குழப்பத்தில் ஜீயர்  இருந்து வந்தார். இன்று காலை அவரைக் காண வந்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும், " ஜீயர் உண்ணாவிரதம் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல, அதனால், உண்ணாவிரதத்தை கைவிடக் கூறியுள்ளேன். அவர் பதில் கூறவில்லை" என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவரைத்தொடர்ந்து எஸ்.வி.சேகரும் அவரைச் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில்தான், " உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாகவும், வைரமுத்துவுக்கு எதிராக சட்டரீதியாக போராட உள்ளதாகவும்" கூறி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!