``எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை'' - மனிதாபிமான செயலில் ஈடுபட்ட வாலிபர் உருக்கம்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக பள்ளமாகக் கிடந்த சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விழுந்து விபத்துக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையில் ஆதரவற்ற இளைஞர் ஒருவர் அந்தச் சாலையைச் சரிசெய்து, மக்களிடம் மனிதாபிமானம் தொடருவதை வெளிப்படுத்தினார்.  

மனிதாபிமானம்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக உள்ள சாலையில் திடீர் பள்ளம் கிடந்தது. இதனை எதிர்பார்க்காமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுவது வாடிக்கையாக நடந்து வந்தது. அந்த வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களிலும் நடந்தும் சென்று வருகிறார்கள். அத்துடன், ஏராளமான வணிக நிறுவனங்களும் அந்தப் பகுதியில் உள்ளன. ஆனால், யாருமே அந்தப் பள்ளத்தைச் சரிசெய்ய முன்வரவில்லை. 

இந்த நிலையில், அந்தப் பள்ளத்தை இளைஞர் ஒருவர் தானாக முன்வந்து சரிசெய்து கொண்டிருந்தார். அருகில் கிடந்த செங்கல், மண் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து அந்தப் பள்ளத்தில் கொட்டி அதனை நிரப்பினார். கடந்த சில வாரங்களாகச் சாலையின் நடுவில் கிடந்த பள்ளத்தை ஒருவரும் சரிப்படுத்தாத நிலையில், தனி நபர் ஒருவர் அதனை சீர்ப்படுத்தியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அந்த இளைஞரிடம் பேசினோம். ’’என் பெயர் வல்லிக்கண்ணன். எனக்கு தூத்துக்குடிதான் சொந்த ஊர். தாய், தந்தை இறந்துவிட்டதால் உறவினர்கள் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. அதனால் பிழைப்புக்காக நெல்லைக்கு வந்தேன். இங்கே கிடைக்கும் வேலையைச் செய்து வருகிறேன். டீக்கடைகளுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பேன். ஹோட்டல்களின் கழிவுகளை அகற்ற உதவுவேன். இப்படிச் செய்யும் தொழில் காரணமாக சாப்பாடும் சொற்ப வருமானமும் கிடைக்கும்.

எனக்குக் குடியிருக்க இடம் எதுவும் கிடையாது. கடைகளின் முன்பாக இரவில் தங்கிக்கொள்வேன். ரயில் நிலையம் அருகில் உள்ள பாத்ரூமில் சுத்தம் செய்யும் வேலை செய்வதால் அங்கேயே குளிக்க முடியும். இப்படிப் பிழைத்து வரக்கூடிய நிலையில், அந்தப் பள்ளத்தில் வாகனங்களில் செல்பவர்கள் தினமும் விழுவதைப் பார்த்து வருந்தினேன். நேற்று குடும்பத்தோடு வந்த ஒருவர் அந்த இடத்தில் விழுந்துவிட்டார். ரயில்வே ஊழியர் ஒருவரும் விழுந்தார். அந்தப் பள்ளத்தில் விபத்து நடப்பதால் அதனை மூடினேன். இனியாவது அந்தப் பள்ளத்தில் யாரும் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதனை மூடினேன்’’ என்றார்.

வல்லிக்கண்ணன்

வடகிழக்குப் பருவமழைக்குப் பின்னர் நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. அவற்றைச் சரிப்படுத்த வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக நல அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டங்கள் கூட நடத்தப்பட்டன. ஆனாலும், நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகளைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனி நபரின் இந்த மனிதாபிமான நடவடிக்கைக்குப் பின்னராவது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்ய முன் வருவார்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!