வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (09/02/2018)

கடைசி தொடர்பு:17:15 (09/02/2018)

`அம்மா, நான்தான் உங்க ரஞ்சித்' - உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் உருக்கமான கடிதம்

பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவரின் தற்கொலையால் அதிர்ச்சியில் உறைந்துகிடக்கிறது திருச்சி மாவட்டம்.
 
திருச்சி லால்குடியை அடுத்த மாந்துறை, நெருஞ்சலக்குடி ஊராட்சி காமாட்சி கார்டன் பகுதி நகர் ரோடு, ராமதாஸ்-திலகவதி ஆகியோரின் மகன் ரஞ்சித்குமார் என்பவர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற ரஞ்சித், வழக்கம்போல, நேற்று மாலை பள்ளியிலிருந்து திரும்பியது திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்கியதைப் பார்த்த பெற்றோர், அவரது உடலை கீழே இறக்கினர். தகவலறிந்த லால்குடி போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவர் ரஞ்சித்குமாரின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், உடலை பிரேதப் பரிசோதனைக்கு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

போலீஸாரின் தொடர் விசாரணையில் மாணவர் ரஞ்சித் குமார், தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், ''அம்மா, நான்தான் உங்க ரஞ்சித், எங்க பள்ளிக்கூடத்தில் என்னை பசங்க எல்லாரும் ஒரு பொண்ணாத்தான் பார்க்கிறாங்க. அதனால்தான் நான் இந்த ஒரு முடிவை எடுத்துட்டேன். அதனால் என்னை மன்னிச்சிடுங்க. என்னோட ஆசை நீங்க இந்த வீட்டை விட்டு போக வேண்டாம். எனது மரணத்துக்கு பிரகாஷ், ஹரிசங்கர், தனுஷ் ஆகியோர்தான் காரணம். எனக்கு நடந்ததுபோன்று வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. என்னை மன்னிச்சுருங்க, இப்படிக்கு உங்கள் அன்பு மகன் ரஞ்சித்'' எனக் கடிதம் முடிகிறது. இதனையடுத்து போலீஸார் ரஞ்சித் குமார் படித்த இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் ஒருவர் தன்னை, சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க