வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (09/02/2018)

கடைசி தொடர்பு:17:58 (09/02/2018)

தீபா மீது குவியும் புகார்கள்... தி.நகர் காவல்நிலையத்தில் என்ன சொல்கிறார்கள்?

தீபா

'கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜாவை நீக்குகிறேன்' என்று அறிக்கை கொடுத்து சில தினங்களுக்குள் மீண்டும் ராஜாவைக் கட்சியில் சேர்த்துக்கொண்டார் தீபா. 2017 ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், ராஜாவை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டு, கடந்த பிப்ரவரி 2 ம் தேதி மீண்டும் கட்சியில் 'தலைமை நிலைய மாநிலச் செயலாளராக' இணைத்துக்கொண்டார். இது ஒருபுறமிருக்க... 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'யின் பொதுச் செயலாளர் தீபாவின் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை அவருடன் இருந்த தொண்டர்களே கூறிவருகின்றனர். ''கட்சியில் பொறுப்பு தருகிறேன் என்று சொல்லி ஆரம்பத்தில் தொண்டர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார் தீபா. ஆனால், கட்சியில் பொறுப்பும் தரவில்லை; வாங்கிய பணத்தையும் தொண்டர்களிடத்தில் திருப்பித் தரவில்லை'' என தீபா கட்சியை விட்டுப் பிரிந்துவந்த தொண்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அடிக்கடி செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் செய்திகள் வருகின்றன. தீபா மற்றும் அவரது கட்சியில் உள்ளவர்கள் மீது காவல்துறையிலும் புகார்கள் குவிந்துவருகின்றன. இந்தநிலையில், 'தீபா மற்றும் ராஜா மீது என்னென்ன வழக்குகள் இருக்கின்றன...' என தி.நகர் காவல்நிலையத்தில் விசாரித்தோம்.

"2017 ம் ஆண்டு ஜானகிராமன் என்பவர், 'தீபா தன் தொண்டர்களிடத்தில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்திருப்பதாக' புகார் கொடுத்தார். அந்தப் புகாரை சி.சி.ஆர் போட்டுவிட்டோம். அதன்பிறகு தீபா மீது யாரும் புகார் தெரிவித்து காவல்நிலையத்துக்கு வரவில்லை. ஆனால், டிசம்பர் மாதம் தீபாவே எங்கள் வீட்டை யாரோ கல் கொண்டு தாக்கியதாக இங்கு வந்து புகார் கொடுத்தார். விசாரித்ததில் அவரே அப்படி ஒரு நாடகம் நடத்தியிருக்கிறார் எனக் கண்டறிந்து அவரைக் கடுமையாக எச்சரித்தோம். இவை மட்டும்தான் தீபா மீது வந்த புகாரும், தீபா அளித்த புகாரும். இதை தவிர தீபா சம்பந்தமாக எந்த வழக்கும் இங்கு பதியப்படவில்லை. ஆனால், அவர் டிரைவரான ராஜா, வாகன மோதல் பிரச்னையில் ஒருவரை அடித்துவிட்டார். அதனால் அடிபட்ட அந்த நபர் ராஜா மீது புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ராஜாவைக் கைது செய்து ரிமாண்டில் வைத்தோம். இவர்களைப் பற்றி எங்கள் காவல்நிலையத்தில் பதிவான வழக்குகள் இவ்வளவுதான். ஆனால், சில தினங்களுக்கு முன் ராமச்சந்திரன் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் பண மோசடி புகார் கொடுத்திருக்கிறார்." என்றார்கள்.

ஜானகிராமன் கொடுத்த புகார் :

ஜானகிராமன்

ஜானகிராமன்

தீபா பேரவையில் தென்மண்டலப் பொறுப்பாளராக இருந்தவர் ஜானகிராமன். இவர்தான் முதன் முதலில் தீபா மீது, கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணமோசடிப் புகார் ஒன்றைக் கொடுத்தார். கட்சித் தொண்டர்களிடமிருந்து ரூபாய் 20 கோடி வரை தீபா மோசடி செய்துள்ளார் என்பதே அந்தப் புகார்.

தனது வீட்டைத் தாக்கியதாக தீபா நடத்திய நாடக வழக்கு :

2017 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் தேதி நள்ளிரவில், மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய வீட்டைக் கல் கொண்டும் கட்டை கொண்டும் தாக்கியதாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் தீபா. ஆனால், போலீஸார் வந்து விசாரணை மேற்கொண்டு எதிர்வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, தீபாவே ஆட்களை ஏற்பாடு செய்து அப்படியொரு சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த காவலர்கள், 'இனி இதுமாதிரியான மோசடிகளைச் செய்யாதீர்கள்'' என்று எச்சரித்துச் சென்றனர்.

தீபா மற்றும் ராஜா

தீபா மற்றும் ராஜா

ராஜா மீது வழக்கு :

2018 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ம் தேதி இரவு, தீபா பேரவையின் தற்போதைய தலைமை நிலைய மாநிலச் செயலாளராக இருந்து வரும் ராஜாவுக்கும், அப்பகுதியில் உள்ள ஒரு சரக்கு வாகன டிரைவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், அந்த டிரைவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார் ராஜா. அந்த டிரைவர் கொடுத்தப் புகாரின்பேரில், தி.நகர் போலீஸார் ராஜாவைக் கைது செய்து ரிமாண்டில் வைத்தனர்.

ராமச்சந்திரன் வழக்கு :

ராமச்சந்திரன்

ராமச்சந்திரன்

தீபாவின் பேரவை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே ஈ.சி.ஆர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உறுப்பினராக இருந்து வந்தவர். இவருக்குக் கட்சிப் பொறுப்புகள் தருவதாகச் சொல்லி 1 கோடியே 12 லட்சம் ரூபாயைத் தீபா தரப்பினர் வாங்கியுள்ளார்களாம். ஆனால், இதுவரை எந்தப் பொறுப்பையும் ராமச்சந்திரனுக்குக் கொடுக்காத தீபா, வாங்கியப் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்கிறார்கள் ராமச்சந்திரன் தரப்பினர். இதையடுத்து 11-01-2018 அன்று கமிஷனர் அலுவலகத்தில், தீபா மீது புகார் கொடுத்துள்ளார் ராமச்சந்திரன். ஆனால், 'இவரைத் தெரியவே தெரியாது' என ராமச்சந்திரனைப் பார்த்துச் சொல்லிவருகிறார் தீபா.

இதுகுறித்து தீபாவிடம் பேச அவரது வீட்டுக்குச் சென்றோம். ஆனால், 'தீபா, வீட்டில் இல்லை'யென பாதுகாவலர்கள் கூறிவிட்டனர். அவரது செல்போனில் தொடர்புகொள்ள முயன்றோம். நமது அழைப்பை தீபா, ஏற்றுக்கொள்ளவில்லை. தீபாவின் கணவர் மாதவன் நம்மிடம் பேசினார். "தீபாவுக்குக் கெட்டபெயரை வாங்கிக்கொடுக்க வேண்டும் என பலர் சதி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய்" என்றார். 

''தொண்டர்கள் பலர் இந்தக் கட்சியை விட்டுச் சென்றுவிட்டார்களே... காரணம் என்ன...'' என்ற நமது கேள்விக்குப் பதிலளித்த அவர், "அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இது தீபாவின் கட்சி. இதில் தொண்டர்களைச் சேர்க்கவும், நீக்கவும் தீபாவுக்கு உரிமை இருக்கிறது." என்றார்.


டிரெண்டிங் @ விகடன்