வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (09/02/2018)

கடைசி தொடர்பு:19:20 (09/02/2018)

வேலூரில் 2 தேர்கள் தீ வைத்து எரிப்பு! மர்ம நபருக்கு போலீஸ் வலை

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியில் உள்ள சாலை கங்கையம்மன் கோயில் மற்றும் பொன்னியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2 தேர்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 2 தேரில் பொன்னியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 15 அடி உயர தேரின் பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த ஓலை திடீரென தீ பிடித்து எரிந்ததில் தேர் முழுவதும் சேதமடைந்தது.

இதன் தாக்கத்தால் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 25 அடி உயர தேர் தீயின் பாதிப்பால் சேதமடைந்தது. திடீரென பற்றிய தீயைப் பொது மக்களே தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். இப்பகுதியில் மது குடிப்பவர்கள் அதிகம் சுற்றும் பகுதி என்பதால் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்திருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எரிந்த 2 தேரின் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும். தீ விபத்து குறித்து சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று இரவு 2 மணிக்கு வேலூர் சத்வாச்சாரி அருகில் கங்கையம்மன் கோயில் தேர் 2 தீப்பற்றி எரிந்தது. 7.2.18 அன்று இரவு திருவாலங்காடு சிவன்கோயில் ஸ்தல விருட்சம் எரிந்தது. 2.2.18 அன்றும் நேற்றைய தினமும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ. இன்னமும் அறநிலையத்துறையை நம்புவோம்" என்று கூறியுள்ளார்.