``என் நண்பன் குதிக்கப்போறான்'' - பாம்பனில் பதறவைத்த இளைஞர்

புளுவேவ் போன்ற விபரீத விளையாட்டுகளாலும் செல்ஃபி எடுக்கும் மோகத்தாலும் இளைஞர்கள் பலர் தங்கள் உயிரைப் பறிகொடுப்பதும் உடலை வருத்திக்கொள்வதும் தொடர் நிகழ்வுகளாக அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் பாம்பன்பாலத்தின் மேலிருந்து இளைஞர் ஒருவர் கடலில் குதிக்கும் வீடியோ காட்சி ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

கடல் மீது கம்பீரமாக காட்சி தரும் பாம்பன்பாலம்

ராமேஸ்வரம் தீவை நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடலின்மீது கட்டப்பட்டது அன்னை இந்திராகாந்தி பாலம். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு நூற்றாண்டைக் கடந்த ரயில் பாலத்தை மட்டுமே நம்பியிருந்த தீவுப் பகுதி மக்களுக்கும் நாடு முழுவதிலும் இருந்து வரும் யாத்திரைவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வரப்பிரசாதமாக அமைந்தது அன்னை இந்திராகாந்தி பாலம். 2.345 கி.மீ நிளம் கொண்ட இந்தப் பாலத்தின் மையப்பகுதி வழியாகக் கப்பல்கள் செல்லும் வகையில் 17.68 மீட்டர் உயரம் மற்றும் அகலத்துடன் தூண்கள் அமைக்கப்பட்டு நாட்டின் வடக்கு - தெற்குப் பகுதிகளில் உள்ள துறைமுக நகரங்களுக்க்கு கப்பல்கள் சென்று வருகின்றன. பாக் நீரிணை மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின்மீது நின்று கடலின் அழகினையும் அதன்மீது கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தின்மீது ரயில் ஊர்ந்து செல்லும் அழகையும் பார்த்து ரசிப்பது காணக்கிடைக்கா காட்சியாகும்.

ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வரும் சிலர் அந்த அழகை ரசிப்பதற்குப் பதிலாக ஆபத்தை வலிய தேடிச் செல்லும் செயல்களில் ஈடுபடுகின்றனர். செல்ஃபி மோகத்தாலும் வறட்டு தைரியத்தாலும் ஈர்க்கப்பட்ட வாலிபர் ஒருவர், பாம்பன் சாலை பாலத்தின்மீது ஏறி கப்பல்கள் செல்லக்கூடிய ஆழம் நிறைந்த நீரோட்டம் மிகுந்த கடல் பகுதியில் குதிக்கிறார். அதை அவரின் நண்பர்கள் படம் பிடிப்பதுடன் அவரைக் கடலில் குதிக்கச் சொல்லி உற்சாகமூட்டுகின்றனர். நன்றாக நீச்சல் அடிக்கத் தெரிந்த நபராக இருந்தால்கூட கடலின் நீரோட்டத்தை எதிர்த்து நீந்த முடியாது. அப்படிப்பட்ட சூழலில் கடலின் ஆழம், அதன் நீரோட்ட வேகம் போன்ற எதைப் பற்றியும் தெரியாமல், நீச்சல் அடிக்கத் தெரியும் என்ற ஒரே அசட்டுத் தைரியத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஆபத்தையே கொண்டு சேர்க்கும். செல்ஃபி மோகத்தில் சிக்கியிருக்கும் இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு தங்களின் உயிருக்கும் உடலுக்கும் கேடு ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது போன்ற செயல்களைத் தடுக்கும் வகையில் பாம்பன் சாலை பாலத்தில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்படுவதுடன், காவல்துறையினரும் போதுமான கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!