வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (09/02/2018)

கடைசி தொடர்பு:20:20 (09/02/2018)

``இலங்கை அரசு தாமதமாக விடுவித்தது!’’ - மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இயலாத தமிழக மீனவர்

 இலங்கைச் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர் ஜெயசீலன் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இரு தினங்களுக்கு முன் இறந்த அவரின் மகன் ஸ்டீபனின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

இலங்கை சிறையில் வைக்கப்பட்ட மீனவர் ஜெயசீலன்
 

மண்டபத்திலிருந்து கடந்த மாதம் 14-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஜெயசீலன், முனியசாமி, சீனி உள்ளிட்ட 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கைக் கடற்படையினரின் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சிறை வைக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரான ஜெயசீலன் என்பவரின் மகன் ஸ்டீபன் என்பவர் கடந்த இரு நாள்களுக்கு முன் உடல்நலக் குறைவால் இறந்துபோனார். ஜெயசீலனின் மனைவியும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர். எனவே, இறந்துபோன ஸ்டீபனின் உடலை இறுதியாகப் பார்க்கவும் அவரது இறுதிச் சடங்கை நடத்தவும் இலங்கைச் சிறையில் உள்ள ஜெயசீலனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்குத் தகவல் அளித்தனர். தமிழக அரசு, மத்திய அரசு மூலமாக இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு ஜெயசீலனின் மகன் இறப்பு குறித்த தகவல்களைத் தெரிவித்தனர்.

இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இலங்கை அரசைத் தொடர்புகொண்டு சிறையில் உள்ள ஜெயசீலனை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து இலங்கை அரசு ஜெயசீலன் மற்றும் அவருடன் பிடிபட்ட 3 மீனவர்களையும் விடுவிக்க உத்தரவிட்டது. இது தொடர்பான உத்தரவை இலங்கை அட்டர்னி ஜெனரல் இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து 4 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு நாளை நாடு திரும்ப உள்ளனர். அவர்கள் இந்தியக் கடலோரக் காவல்படையிடம் இன்றிரவு ஒப்படைக்கப்பட்டு, நாளை (10.2.2018) காரைக்கால் துறைமுகம் அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது. இதனிடையே இரு நாள்களுக்கு முன் இறந்துபோன ஸ்டீபனின் உடல் மோசமடைந்ததால், இன்று (9.2.2018) காலை பாம்பன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இலங்கை அரசு விடுவித்தும் தனது மகனின் முகத்தை இறுதியாகப் பார்க்க முடியாத சோகத்தில் நாடு திரும்ப உள்ளார் மீனவர் ஜெயசீலன்.