5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓய்வூதியதாரர்கள்!

தமிழ்நாடு ஓய்வூதிய சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைக்களை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி அடங்கிய மண்டல ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் மாதவன், ஜெயபால், பெருமாள், நாராயணன், சண்முகசுந்தரம் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து சேலம் மாவட்டத் தலைவர் மாதவன் கூறுகையில், ''தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும், 7-வது ஊதியக் குழுப் பரிந்துரைப்படி 1.1.2016 முதல் 30.9.2017 வரையில் ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே ரொக்கமாக வழங்கிட வேண்டும்.

ஓய்வுபெற்ற அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியத் தொகையை ரூ. 2000-த்திலிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கிட வேண்டும். ஓய்வூதியர்களுக்கான மருத்துவப்படியை ரூ.300-லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்'' என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து ஓய்வூதிய சங்க நிர்வாகிகளை சேலம் கலெக்டர் ரோஹிணியைச் சந்தித்து, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!