``அப்போ ரூ.12,500; இப்போ ரூ.6,000’’ - மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளின் சோகம்  

மரவள்ளிக் கிழங்கை அரசே கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சேலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பாக சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
 
இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மரவள்ளி உற்பத்தியாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், ''சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்கள் மழை மறைவு பிரதேசமாகும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரவள்ளிக்கிழங்கு பிரதானப் பயிராக இருக்கிறது. பஞ்ச காலங்களில் மக்களின் பசி போக்கும் உணவு பொருளாகப் பயன்படும் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு சேகோ ஆலைகள் மூலம் ஸ்டார்ச் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த ஸ்டார்ச் மாவில் சேகோ ஆலைகள் மக்காச்சோள மாவுகளைக் கலப்பதாலும், வெளி நாடுகளிலிருந்து கலப்பட மாவுகள் வருவதாலும் உள்நாட்டு மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது'' என்றார்.

இப்போராட்டத்திற்கு மரவள்ளிக் கிழங்கோடு வந்த விவசாயி வேல்முருகன், '' என்னோட சொந்த ஊரு சேலம் வெள்ளாளப்பட்டி. நான் 10 ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டிருக்கிறேன். 2 மாதத்திற்கு முன்பு ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.12,500-க்கு விற்பனை ஆனது. தற்போது ஒரு டன் வெறும் 6,000 ரூபாய் விற்பனையாகிறது. நான் பயிரிட்டதற்கான செலவுத் தொகை கூட எனக்குக் கிடைக்கவில்லை. இதன் மூலம் நான் பெரிது பாதிக்கப்பட்டிருக்கிறேன். தமிழக அரசே மரவள்ளிக் கிழங்கிற்கான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் என் போன்ற விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!