ஊதிய உயர்வு கேட்டு காதில் பூ வைத்துப் போராடிய ஆசிரியர்கள்!

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  காதில் பூ வைத்து  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்புப் போராட்டம் சிவகங்கை தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி பேசும் போது,“15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னால் 2017 பிப்ரவரி 3-ம் தேதி சென்னை தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்பொழுது பேச்சுவார்த்தை நடத்திய கல்வித்துறை செயலர் சபீதா  கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், உடனடியாக அரசாணை வெளியிடப்படும் எனவும் உறுதியளித்தார். ஆனால் ஓராண்டாகியும் எவ்வித உத்தரவும் வெளியிடப்படாததால் தற்பொழுது இந்தப் போராட்டத்தை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதுமுள்ள மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகங்கள் முன்பு நடத்தியுள்ளார்கள்.

தமிழகத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டுதல், தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்தல், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் அனுமதித்தல், உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு பின் அனுமதி வழங்குதல், மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகள் களைதல், காலிப்பணியிடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டுதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி ஊதியத்திற்கு முழுப்பணப்பலன்களை வழங்குதல், ஆசிரியர்கள் பெற்று வந்த சிறப்புப் படிகளை மீண்டும் வழங்க வேண்டுதல், தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல், கற்பித்தல் பணியைத் தவிர்த்து மாற்றுப்பணிகள் ஆசிரியர்களுக்கு வழங்குவதைத் தவிர்த்தல், அனைத்து தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கும் இணைய வசதி ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளுக்கு உடனடியாக ஆணை வெளியிட வேண்டும் என ஆசிரியர்கள் முழக்கமிட்டனர். இந்தப் போராட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!