வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (10/02/2018)

கடைசி தொடர்பு:02:00 (10/02/2018)

“ப்ராக்டிகலா ஏதாச்சும் செய்வோமே..!” -  பூமார்கெட்டில் ஆக்ஷன் ப்ளானில் இறங்கிய கல்லூரி மாணவிகள்

மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் தினமும் 10 டன் அளவிலான விற்பனை செய்யப்படாத பூக்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன.  அவ்வாறு கொட்டப்படும் பூக்களைக் குளியல் சோப்பு மற்றும் அலங்காரப் பொருட்களாக மாற்றி பூக்கடை உரிமையாளர்களின் வருவாயை அதிகரிக்கலாம் என்கிறார்கள் மதுரை லேடிடோக் கல்லூரியின்  இறுதி ஆண்டு வணிகமேலாண்மை துறை மாணவிகள். இந்த ப்ளான் பற்றி மாணவிகள் "காலேஜ் பைனல் இயர் ப்ராஜக்ட்காக, இந்த மார்கெட்ட செலக்ட் பண்ணோம்.வெறும் தியரியா மட்டுமே இல்லாம இங்க தொழில் செய்யற மக்களுக்கு ஏதாச்சும் ஒரு வகையில ஹெல்ப் பண்ணறதுகாக இந்த சோப் அண்ட் ஆர்ணமென்டல் ஃப்ளார் மேக்கிங் கிளாஸை அரேன்ஜ் பண்ணிணோம். ஆரம்பத்துல நாங்க கூப்பிடும் போது சரியா ரெஸ்பான்ஸ் கிடைக்கல. ஆனா இன்னைக்கு நிறைய பேர் ஆர்வமா கலந்துக்குறத பார்க்கும்போது வீ ஆர் வெரி ஹேப்பி" என மலர்கிறார்கள்.
 


 

தொழில் முனைவோர் மற்றும் பயிற்றுனரான சுசித்ரா, "கிளிசரின், பிராக்ரண்ஸ் எஸன்ஸ் மற்றும் பூக்களின் எக்ஸ்ட்ராக்டைக் கொண்டு எளிய முறையில் குளியல் சோப்புகள் செய்யலாம். இதற்கான முதலீடும் குறைவு. இவ்வாறு தயாரிக்கப்படும் சோப்புகளை அருகில் உள்ள ஹோட்டல்கள், திருமணமண்டபங்களுக்கு விற்பனை செய்யலாம். இது பூக்கடை உரிமையாளர்களுக்கு கூடுதல் வருவாயை ஈட்டித் தரும்" என்கிறார்.
 


 

பூக்கடை உரிமையாளர் பாண்டிச் செல்வி கூறியதாவது, "விலை அதிகமா இருக்குற காலங்களில் ஜனங்க  மார்கெட்டுக்கு பூ வாங்க வரதை குறைச்சுக்குவாங்க. அந்த நேரத்துல போட்ட முதல கூட எடுக்க முடியாம போயிடும். விற்பனை செய்ய முடியாத பூக்களை காய வைச்சு பர்ப்யூம், பவுடர் செய்யதுக்கு அனுப்புவோம். அதுலயும் சரியான விலை கிடைக்குறது இல்ல.பூக்களில் இருந்து சோப்பு செய்யறது,  எளிமையாவும் குறைந்த முதலீட்டுலயும் இருக்கு. மார்கெட் வியாபாரம் போக மீதி நேரத்துல முயற்சி செஞ்சு பார்க்கலாம்னு இருக்கேன்."என தெரிவித்தார்.