வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (10/02/2018)

கடைசி தொடர்பு:03:00 (10/02/2018)

திருப்பூரில் ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சி கோலாகலம்!- தொழில்முனைவோர் உற்சாகம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள ஐ.கே.எஃப் வளாகத்தில் டெக்ஸ்டைல் ரிசர்ச் கான்க்ளேவ் என்ற பெயரில் ஜவுளித்துறை சார்ந்த அறிவியல் தொழில்நுட்ப கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேசன் சார்பில் நடைபெறும் இக்கண்காட்சியை தமிழக அரசின் கைத்தறி, கைவினை, ஜவுளி மற்றும் காதித் துறை தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி வெள்ளியன்று துவங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், "பின்னலாடை ரகங்களின் தலைநகரமாக திருப்பூர் விளங்குகிறது. ஜவுளித்துறை சார்ந்த பிரச்னைகளுக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதுபோன்ற கண்காட்சிகள் அதிகளவு நடத்தப்படுவதால், இத்துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள் உருவாக வழிவகுக்கும். இந்நிகழ்வின் மூலமாக துணி உற்பத்தியாளர்களையும், ஆராய்ச்சி நிறுவனங்களையும்
 ஒருங்கிணைத்திருக்கிறோம். ஜவுளித் தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து மேம்படுத்தி, பெரிய அளவில் விரிவுபடுத்த தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது” என்றார்.

இன்றுடன் நிறைவடையும்  இந்தக் கண்காட்சியில் ஜவுளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் துணி உற்பத்தியாளர்களின் சார்பில் 20 அரங்குகள் அமைக்கப்பட்டு, துறை சார்ந்த பல்வேறு தொழில்நுட்பங்களை தொழில் முனைவோரின் பார்வைக்காக காட்சிக்கு வைத்துள்ளனர்.