ஆதாரங்களை அழித்த பிறகே சிபிஐ சோதனை: ஜெ.

சென்னை, பிப்.21,2011

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்புடைய ரூ.206 கோடிக்கான பணப் பரிமாற்றம் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்ட பின்பே கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "2ஜி அலைக்கற்றை தொடர்புடைய தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த பால்வா, கலைஞர் டி.வி.யிடம் ரூ.206 கோடியை கொடுத்திருப்பதாகப் புலனாய்த்துறை நீதிமன்றத்தில் வெளியிட்டது. இதன்மூலம் புலனாய்வுத்துறை பெரிய தவறைச் செய்துள்ளது.

இது போன்ற சந்தேகத்தை வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு கலைஞர் டி.வி. அலுவலகத்தை சோதனை செய்து அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி இருக்க வேண்டும். பொதுவான நடைமுறையைப் பின்பற்றியதன் மூலம், கலைஞர் டி.வி. நிர்வாகத்துக்கு போதுமான கால அவகாசத்தை அளித்து, தப்பிப்பதற்கு மத்திய புலனாய்வுத்துறை வழிவகுத்துவிட்டது.

அண்ணா அறிவாலயத்தில் இரவோடு இரவாக உயர்நிலைக் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதி மட்டுமல்லாமல் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர். பாலு, கலைஞர் டி.வி.யின் தலைமைச் செயல் அலுவலர் சரத்குமார், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், மூத்த வழக்கறிஞர்கள், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு ஆகியோர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இரவு 11 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டம் காலை 4 மணிக்குத்தான் முடிந்ததாம்.

பிப்ரவரி 13-ம் தேதி கலைஞர் டி.வி. தொடர்பான முக்கிய ஆவணங்கள் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு, பெருங்குடியில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 15-ம் தேதி கலைஞர் டி.வி. தொடர்புடைய ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள், ரொக்க செலவுச் சீட்டுகள், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதுகள் சிறு, சிறு துண்டுகளாகக் கிழிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நம்பகமான ஆதரங்கள் அனைத்தையும் அழித்த பிறகு குற்ற ஆவணங்கள் இருந்த இடத்தை முழுவதுமாக சுத்தப்படுத்திவிட்டு, "ரூ. 206 கோடி பணப் பரிமாற்றத்திற்கும், 2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை, பெறப்பட்ட பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது' என்று ஓர் அறிக்கையை வெளியிட்டார் சரத்குமார்.

இது மட்டுமல்லாமல், "மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித் துறைக்கோ இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் கலைஞர் டி.வி. தொடர்பான கணக்குகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்வதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை' என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அழைப்பை ஏற்றுதான் மத்திய புலனாய்வுத்துறை கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சோதனை நடத்தியதைப் போல் தெரிகிறது. மத்திய புலனாய்வுத் துறை சிரமம் பார்க்காமல் சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளைத் தோண்டி ஆராய்ந்து பார்த்தால், அலைக்கற்றை ஊழலுக்கும், கலைஞர் டி.வி.க்கும் உரிய பூதாகரமான தொடர்புகளைக் கண்டுபிடித்து வெளிப்படுத்த முடியும்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!