இலவச நாப்கின் தரும் இயந்திரம்! - அசத்தும் சென்னைத் திரையரங்கம்  |  Vending machines will dispense free sanitary napkins at sathyam cinemas! 

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (10/02/2018)

கடைசி தொடர்பு:10:05 (10/02/2018)

இலவச நாப்கின் தரும் இயந்திரம்! - அசத்தும் சென்னைத் திரையரங்கம் 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தங்கள் திரையரங்கில் இலவசமாக சானிடரி நாப்கின் வழங்கப்படும் என்று சத்யம் சினிமாஸ் அறிவித்துள்ளது தேசியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

சத்யம் சினிமாஸ்
 

பெண்களுக்குக் குறைந்த செலவில் நாப்கின்கள் தயாரித்த கோயம்பத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கை கதையைப் பேசும் படம்தான் ‘பேட்மேன்’. படக்குழு  இத்திரைப்படத்தைப் பல்வேறு வகையில் விளம்பரப்படுத்தி வரும் நிலையில், #PadManChallenge சமூகவலைதளங்களில் வைரலானது. #PadManChallenge சவாலை முதலில் தொடங்கிவைத்தவர் அருணாச்சலம் முருகானந்தம். அக்‌ஷய் குமார் மற்றும் அவரின் மனைவி டிவிங்கிள் கண்ணாவுக்குச் சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு பதிவிட்டார். இதனையடுத்து #PadManChallenge  மிகவும் பிரபலமானது. திரைப்பிரபலங்கள் கையில் நாப்கினை பிடித்து போஸ் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சத்யம் சினிமாஸ் நிறுவனம் ’நாங்களும் #PadManChallenge ஏற்றுக்கொள்கிறோம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டு ஒரு புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள தங்கள் திரையரங்கில் நாப்கின் வென்டர் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் கழிப்பறை அருகே வைக்கப்பட்டுள்ள அந்த இயந்திரத்தில் ஒரு போன் நம்பர் குறிப்பிட்டிருக்கும். இயந்திரம் அருகே நின்று அந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். பின்னர் இயந்திரத்திலிருந்து நாப்கின் பெற்றுக்கொள்ளலாம்.


இதுகுறித்து சத்யம் நிறுவன அதிகாரி ஒருவர் பேசுகையில் ”சத்யம் சினிமாஸ் நிறுவனத்தில் நிறைய பெண்கள் பணிபுரிகின்றனர். மாதவிடாய் சமயங்களில் அவர்கள் அவதிப்படுவதை பார்த்திருக்கிறோம். மேலும் படம் பார்க்க வரும் பெண்கள் சில நேரம் ’நாப்கின் இருக்கிறதா’ என்று எங்கள் பெண் பணியாளர்களிடம் தயங்கித் தயங்கிக் கேட்பதாகக் கேள்விப்பட்டோம். அவர்களிடம் இருந்தால் கொடுப்பார்கள். இல்லையென்றால் படம் பார்க்க வரும் பெண்கள் வெளியே இருக்கும் கடைகளுக்குச் சென்று வாங்கி வர வேண்டியதிருக்கும். இதுபோன்ற சூழலை தவிர்க்கவே இந்த நாப்கின் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது’ என்றார். சத்யம் சினிமாஸின் இந்த முயற்சியை நெட்டிசன்ஸ் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க