வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (10/02/2018)

கடைசி தொடர்பு:14:45 (09/07/2018)

பாம்பன் கடலில் ஒளிர்ந்த சிலைகள்! - மீட்டெடுத்த மீனவர்

பாம்பன் கடலில் கிடந்த சாமி சிலைகளை மீட்ட மீனவர் அவற்றைக் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

பாம்பன் கடலில் கிடந்த சாமி சிலைகள்

பாம்பன் சாலைப் பாலம் மற்றும் ரயில் பாலங்களிலிருந்து தூண்டில் மூலம் மீனவர்கள் சிலர் கடலில் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் ரயில் வருகையின் போது ஒதுங்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நின்றுகொண்டு மீனவர்கள் தூண்டில் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாம்பனைச் சேர்ந்த காளிதாஸ் என்ற மீனவர் இன்று காலை பாம்பன் ரயில் பாலத்தின் மீது நின்றுகொண்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது கடலில் சூரிய ஒளிபட்ட நிலையில் எழுந்த ஒளியானது காளிதாஸின் கண்களைக் கூசச் செய்துள்ளது. 

இதையடுத்து ஒளி வந்த கடல் பகுதியில் குதித்த மீனவர் காளிதாஸ் அங்கு சில சிலைகள் கிடப்பதை கண்டார். அந்தச் சிலைகளை எடுத்து பார்த்த போது ஒளியூட்டக் கூடிய வர்ணம் பூசிய அரை அடி முதல் ஒரு அடி வரையிலான உயரம் கொண்ட அம்மன் உள்ளிட்ட சாமி சிலைகள் என்பதைக் கண்டார். இதையடுத்து கடலில் கிடந்த 15 சிலைகளையும் மண்டபத்தில் உள்ள கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் மீனவர் காளிதாஸ் ஒப்படைத்தார். போலீஸார் அவற்றை ராமேஸ்வரம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.