வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (10/02/2018)

கடைசி தொடர்பு:15:35 (10/02/2018)

நாட்டு மரங்கள், பாரம்பர்ய பறவைகளுக்காக ஒரு திருவிழா!

இலுப்பை, மகிழம், வேங்கை, பூவரசு என இன்னும் ஏராளமான நாட்டு மரங்கள் பெரும் எண்ணிக்கையில் தமிழ்நாடும் முழுவதும்  பரவலாக நின்று நிலைத்து காலம் காலமாக தழைத்தோங்கின. இலுப்பையூர், மகிழம்பாடி, விளாத்திக்குளம் என ஊர்களின் அடையாளமாக மரங்களே திகழ்ந்தன. இவைகளில் பெரும்பாலானவை மருத்துவக் குணம் கொண்டவை. இந்த மரங்களின் காற்றை சுவாசித்ததாலேயே நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டின் பாரம்பர்யமான பறவை இனங்களும் சுற்றுச்சூழலை பல வகையிலும் வளப்படுத்தியது. ஆனால் தற்பொழுது இவற்றைப் பார்ப்பதென்பது அரிதாகிவிட்டது.

இந்நிலையில்தான் இன்றைய தலைமுறையினரிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தி, நாட்டு மரங்களையும் பறவைகளையும் மீட்டெடுக்கும் உயரிய நோக்கத்துடன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பல்லுயிர் பெருக்கம் திருவிழா நடைபெற்றது. அழிவின் விளிம்பில் இருக்கும் நாட்டு மரங்கள், அழிந்துபோன மரங்கள் என 100 வகையான மரக்ககன்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மருத்துவக் குணங்கள் விவரிக்கப்பட்டிருந்தன.

இன்றைய இளைய தலைமுறை பார்க்காத 75 வகையான பாரம்பர்ய பறவை இனங்களின் படங்கள் மற்றும் இவற்றின் சிறப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் எனப் பல தரப்பினரும் இவற்றை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். நாட்டுமரங்களின் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டதோடு, இவற்றை வளர்த்தெடுக்கும் முறைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களும் கொடுத்து அசத்தினார் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்த வனம் கலைமணி. இவரிடம் பேசியபோது ‘மரங்கள், பறவைகள், பூச்சிகள் எனப் பல்லுயிர்  பெருக்கம் சீராக நடந்தால்தான் மனித இனம் பாதுகாக்கப்படும். இல்லையென்றால் எதிர்காலத்தில் இந்த பூமியில் மனித இனமே இருக்காது. இதனை உணரவைப்பதற்காகத்தான் இந்தத் திருவிழாவை நடத்துகிறோம்”என்றார்.