வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (10/02/2018)

கடைசி தொடர்பு:14:40 (10/02/2018)

தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி காவல்துறையினர் நடத்திய பேரணி!

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திலிருந்து காவல்துறையின் சார்பில் சாலைப்பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் விழிப்புஉணர்வுப் பேரணி நடைபெற்றது.

ராமநாதபுரம் காவல்துறையினர் நடத்திய ஹெல்மட் பேரணி 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாத காரணத்தினால் ஏராளமானோர் விபத்துகளில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இதனை தவிர்க்க மாவட்டக் காவல்துறை நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறையின் சார்பில் நடந்த இந்தச் சாலைப்பாதுகாப்பு மற்றும் தலைக்கவச விழிப்புஉணர்வுப் பேரணியை ஆயுதப்படை மைதானத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணி ஆயுதப்படை மைதானத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆயுதப்படை மைதானத்தில் வந்து நிறைவு பெற்றது. பேரணியின் போது மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனும், ஓம்பிரகாஷ் மீனாவும் தனித்தனியாக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் ஆயுதப்படை காவலர்கள், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் லிங்க பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்டவர்களில் இருசக்கர வாகனத்தின் பின்னால் இருந்தவர்கள் சாலைப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புஉணர்வு பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர்.