வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (10/02/2018)

கடைசி தொடர்பு:16:30 (10/02/2018)

``ஓ.பி.எஸ். எட்டப்பன்; ஈ.பி.எஸ். துரோகி!’’ - கோவையில் கொதித்த தினகரன் ஆதரவாளர்கள்

கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் கொதிகொதித்துப் பேசியுள்ளனர்.

புகழேந்தி

தினகரன் ஆதரவாளர்கள் சார்பில், எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், கோவை பி.என்.புதூரில் நடைபெற்றது. தினகரன் அணியின் கோவை மாவட்டச் செயலாளர் சின்னதுரை தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நாஞ்சில் சம்பத் மற்றும் பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய புகழேந்தி, ``தினகரன்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். எத்தனை ஒடுக்குமுறைகளை கையாண்டாலும், அதையெல்லாம் உடைத்துப் பொதுக்கூட்டம் நடத்துவோம். ஆர்.கே.நகரைப்போல தமிழகம் முழுவதும் வெற்றி பெறுவோம். தமிழகத்தில், கையாலாகாத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இத்தனை பேரைக் கடித்த டெங்குக் கொசு, அமைச்சர்களை கடித்துக் கொல்லாமல் விட்டுவிட்டது. டெங்குக் காய்ச்சலும் நமக்கு துரோகம் செய்துவிட்டது.

பன்னீர்செல்வம் என்கிற எட்டப்பனும், எடப்பாடி என்கிற துரோகியும் சேர்ந்து சதி செய்துவிட்டனர். தி.மு.க-விடம் தோற்றால்கூட பரவாயில்லை. ஆனால், பி.ஜே.யிடம் கட்சியை அடமானம் வைத்துள்ளனர். கருணாநிதி ஆக்டிவாக இருந்தால், இந்த ஆட்சி ஒரு நாளில் கவிழ்ந்துவிடும். எனக்கும், நாஞ்சில் சம்பத்துக்கும் வாய்ப்பூட்டெல்லாம் போடமுடியாது. உங்களிடம் 112 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். ஆனால், தினகரனுக்கு நானும், அண்ணன் நாஞ்சில் சம்பத்துமே போதும். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து, ஜெயித்துவிடுவோம். வேலுமணியே உனக்கு அரசியல் சாவுமணி அடிக்கும் காலம் வந்துவிட்டது’’ என்றார்.