'அரசியலுக்கு வாங்க; ஆனா, தேசிங்குராஜா ஆகமுடியாது'- ரஜினியைக் கலாய்த்த வைத்திலிங்கம்

கர்நாடக முதல்வரிடம் சொல்லி ரஜினிகாந்த் காவிரியில் தண்ணீர் திறக்க வைக்கலாம் என்றும் முழுமையாக அரசியலுக்கு வந்த பிறகே அவருக்கு அரசியலில் உள்ள சிஸ்டங்கள் புரியும் என்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரஜினியைச் சாடியுள்ளார்.

வைத்திலிங்கம்
 

ரஜினிகாந்த தமிழகத்தில் சிஸ்டம் சரி இல்லையென்று சொன்னாலும் சொன்னார் அதிமுக முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் எல்லாம் அதற்கு எதிர்வினையாற்றுவதோடு அவரை கடுமையாகச் சாடியும் வருகிறார்கள்.

தஞ்சாவூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய வைத்திலிங்கம் உலக அரசியல் வரலாற்றில் சினிமாவிலிருந்து 228 பேர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் தனியாகக் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் எம்ஜிஆர்,ஜெயலலிதா,ஆந்திராவில் என்டி.ராமராவ்,அமெரிக்காவில் ரீகன் என இன்னும் ஒரு சிலர் மட்டும்தான் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். இன்றும் அவர்கள் மக்கள் மனதில் மறையாமல் இருக்கிறார்கள்.

இன்றைக்கு நடிகர்கள் ரஜினி,கமல் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறார்கள். மக்களின் ஆதரவைப் பொறுத்துதான் அவர்கள் அரசியல் பயணம் தொடரும். இன்று காவிரியில் தண்ணீர் இல்லாமல் டெல்டா மாவட்டப் பயிர்கள் எல்லாம் கருகுகின்றன. ஒரு முறை தண்ணீர் திறந்தால்  மூன்று லட்சம் ஏக்கர் பயிரையாவது காப்பாற்றலாம். அரசியலுக்கு வர நினைக்கிற ரஜினிகாந்த கர்நாடக முதல்வரிடம் பேசி காவிரியில் தண்ணீர் திறக்கச் சொல்லலாம். விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களே என ஒரு வார்த்தையாவது சொன்னாரா குரல் கொடுத்தாரா. செஞ்சிக்கோட்டையில் நின்றால் தேசிங்கு ராஜா ஆகமுடியாது.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்கிறார். அவர் முழுமையாக அரசியலுக்கு வந்த பிறகுதான் அரசியலில் உள்ள சிஸ்டங்கள் எல்லாம் புரியும். அப்போதுதான் அரசியலும் அவருக்குத் தெரியும் என சாடினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!