வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (10/02/2018)

கடைசி தொடர்பு:17:00 (10/02/2018)

``பனை மரம்தான் எங்கள் பாலம்!’’ - இது நெல்லை சோகம்

ஒகி புயல் பாதிப்பின்போது அடித்துச்செல்லப்பட்ட பாலம் இதுவரையிலும் சீரமைக்கப்படாததால் பொதுமக்களே பனைமரத்தைப் பாலமாக்கிப் பயன்படுத்தும் அவலம் நடைபெற்று வருகிறது. அந்தப் பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பாலம் உடைந்ததால் மாற்று ஏற்பாடு

நெல்லை, குமரி மாவட்டங்களைத் தாக்கிய ஒகி புயலின் போது, நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள நம்பியாற்றுத் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அணைக்கரை, சிறுமளஞ்சி ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பாலத்தைக் கடந்தே செல்ல வேண்டிய நிலையில், பாலம் உடைபட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால் அந்தப் பாலத்தைச் சீரமைத்துத் தரக்கோரி டிசம்பர் 4-ம் தேதி பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தினார்கள். 

இந்தப் பாலம் உடைந்ததால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. வயதானவர்களால் ஊரை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேசிய அதிகாரிகள், அந்தக் கிராமத்துக்கு மாற்றுப் பாதையில் பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தனர். அத்துடன், முதியோர் உதவித் தொகையை அதிகாரிகளே நேரில் கொண்டு வந்து கொடுக்க ஏற்பாடு செய்வதாகவும், ரேஷன் பொருள்களையும் ஊருக்குள் கொண்டு வந்து கொடுக்கச் செய்வதாகவும் உறுதியளித்தனர்.

ஆனால், 10 நாள்களுக்கு மட்டுமே பேருந்து இயக்கப்பட்ட நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் கொடுத்த பிற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் ஊருக்குள் முடங்கிக்கிடக்க விரும்பாத கிராம மக்கள், பனை மற்றும் தென்னை மரங்களைக் கொண்டு தற்காலிகப் பாலம் அமைத்து அதன் மூலமாக நம்பியாற்றைக் கடந்து வெளியே வருகிறார்கள். இந்தத் தற்காலிகப் பாலம் ஆபத்து நிறைந்ததாக உள்ளது. 

தற்காலிகப் பாலத்தை பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்துவது ஆபத்தை வரவழைக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒகி புயல் பாதிப்பு ஏற்பட்டு இரு மாதங்களாகியும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாததைக் கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள், விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பாக தரைப் பாலத்தை சீரமைத்துக்கொடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளனர்.