வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (10/02/2018)

கடைசி தொடர்பு:20:16 (11/02/2018)

ஒரே பரிசுப்பொருளை பலருக்கு கொடுப்பதாக ஃபோட்டோ எடுத்ததால் பரபரப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான "தமிழகப் பள்ளிக் கலைத்திருவிழா" இன்று காலை தேனியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவிற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

கலைநிகழ்ச்சிகளோடு தொடங்கிய கலைத்திருவிழாவை பன்னீர்செல்வம் ரசித்துப் பார்த்தார். விழாவின் முடிவில், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், பரிசு பெறும் மாணவ மாணவிகளின் பெயர்களை வாசிக்க, வரிசையாக வந்து துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் கைகளிலிருந்து பரிசுகள் வாங்கினர். பிறகு அதே பரிசுகளை வைத்து பலருக்கும் தருவது போல், ஃபோட்டோ எடுக்கப்பட்டது. இது அங்கிருக்கும் மாணவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது