வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (10/02/2018)

கடைசி தொடர்பு:19:26 (10/02/2018)

"ஓடி விளையாடு!" - தூத்துக்குடியில் தொடங்கிய விடுதி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

"ஓடி விளையாடு” என்ற பெயரில் தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதிதிராவிடர்,பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும், மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் இன்று (10.2.2018) தொடங்கியது.


 

இன்றைய சூழ்நிலையில் மாணவர்களுக்குக் கல்வியினால் ஏற்படும் மனஅழுத்தம் அதிகரித்து வருகிறது. அந்த அழுத்தத்திலிருந்து மாணவர்களை விடுவிக்கும் வகையிலும், கல்வியோடு மற்ற திறமைகளை வளர்க்கும் வகையில் பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். தமிழகத்தில் முதல்முறையாக, விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளன. மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு “ஓடி விளையாடு” என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் இன்று (10.02.18) மற்றும் நாளை (11.02.18) ஆகிய 2 நாள்கள் தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. 

முதலில்மாணவ,மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. பின், விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியர் வெங்கடேஷ் தொடங்கிவைத்தார். 

தடகளப் போட்டிகளான ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், கபாடி, கோ-கோ, வளைப்பந்து, இறகுப்பந்து ஆகிய போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள 93 விடுதிகளில் தங்கிப் பயிலும் 590 மாணவர்களும், 471 மாணவிகளும் பங்கேற்கின்றனர். இவர்களுக்குக் கடந்த ஒரு வாரமாக விடுதிகளிலேயே பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த 2 நாள்களும் மாலையில் கலைநிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. பார்வையாளராகக் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இலவச அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு பார்வையாளர்களில் 5 பேருக்குக் குலுக்கல் முறையில் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு செய்முறைத்தேர்வுகள் நடந்து வருதால் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் மட்டுமே விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி அளவில் 2 பிரிவாகவும், கல்லூரி அளவில் ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. ”இதன் மூலம் ஒவ்வொரு விடுதிகளில் உள்ள மாணவர்களின் பங்களிப்பை கருத்தில்கொண்டு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொடுக்கப்படும்.”என ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க