``புகழ்பெற்ற மனிதர்களால் விருதுகளுக்குத்தான் கௌரவம்!’’ - இளையராஜா குறித்து நெகிழ்ந்த கார்த்திக்ராஜா

”இளையராஜாவுக்குக் காலம் தாழ்த்தி இந்த விருது வழங்கப்பட்டிருந்தாலும் தற்போதாவது வழங்கப்பட்டிருக்கிறதே என்று அவரது மகனாகவும், ரசிகராகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கார்த்திக் ராஜா தெரிவித்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா இன்று (10.2.2018) புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி முதல் பன்னிரு திருமுறை திருவிழா நடைபெற இருக்கிறது. என் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்’’ என்றார். 

அவரிடம் இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கார்த்திக் ராஜா, “எப்போதும் புகழ்பெற்ற மனிதர்களாலேயேதான் விருதுகள் பெருமைகொள்கின்றன. காலம் தாழ்த்தி இந்த விருது வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதாவது வழங்கப்பட்டிருக்கிறதே என்று அவரின் மகனாகவும், அவரது ரசிகராகவும் மகிழ்ச்சியடைகிறேன். இசைஞானி இளையராஜா வெளிநாட்டில் பிறந்திருந்தால் அந்த நாடே அவரைக் கொண்டாடியிருக்கும். ஆனால் தமிழகம் அப்படி இல்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!