வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (10/02/2018)

கடைசி தொடர்பு:20:30 (10/02/2018)

``பயிர்க்காப்பீடு வழங்குவதில் தாமதம் ’’ - சாலைமறியலில் ஈடுபட்ட 2 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உள்பட 197 பேர் கைது!

கோவில்பட்டியில் நிலுவையில் உள்ள  பயிர்க்காப்பீட்டுத் தொகையை வழங்கிட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 2
முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உள்பட 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் 65 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் மானாவாரி நிலங்கள்தாம். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தார், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் மழையை மட்டுமே நம்பி செய்யும்  மானாவாரி விவசாயம்தான் நடந்துவருகிறது. இப்பகுதிகளில் மானாவாரியாக கம்பு, சோளம், மக்காச்சோளம், பாசி, உளுந்து ஆகியவை பயிரிடப்பட்டு வருகின்றன. 

கடந்த 2016-17-ம் ஆண்டுக்கான நிலுவையில் உள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகை மானாவாரி விவசாயிகளுக்குத் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதற்காக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தியும் எந்தப் பலனும் இல்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகளுக்கும் ஆட்சியர், அதிகாரிகளுக்கும் இடையிலான வாக்குவாதம் நடைபெறுவதும், கூட்டம் பாதியில் முடிக்கப்படுவதும், விவசாயிகள் வெளிநடப்பு செய்வதும் வாடிக்கையாகவே நடந்து வருகிறது. 

மற்ற மாவட்டங்களில் காப்பீட்டுத் தொகை முழுமையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து காலதாமதம் ஆகிவருவதைக் கண்டித்தும், இதற்குக் காரணமான இன்சூரன்ஸ் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பயிர்காப்பீட்டில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவில்பட்டி, அண்ணா பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில விவசாயிகள் கொளுத்தும் வெயிலில் சாலையில் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனக் கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். 

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் அய்யலுசாமி, ராஜேந்திரன் மற்றும் 33 பெண்கள் உள்பட 197 விவசாயிகளைப் போலீஸார் கைது செய்தனர். விவசாயிகளின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. விரைவில் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத் தொகையை வழங்கிட நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க