``வர்த்தகத் துறைமுகத்துக்கு எதிர்ப்பு’’ - குமரி மக்கள் உண்ணாவிரதம் | People staged protest against proposed commercial port scheme in kanyakumari District

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (10/02/2018)

கடைசி தொடர்பு:21:00 (10/02/2018)

``வர்த்தகத் துறைமுகத்துக்கு எதிர்ப்பு’’ - குமரி மக்கள் உண்ணாவிரதம்

குமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கீழமணக்குடி கிராமத்தில் பொதுமக்கள் இன்று (10.2.2018) உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய அரசை போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். 

உண்ணாவிரதம்

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள இனையத்தில் வர்த்தகத் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது இதற்கான இடம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், வர்த்தகத் துறைமுகம் அமைத்தால் தங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இனையம் துறைமுகத் திட்டத்தை கைவிடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தால் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

பின்னர், குமரி மாவட்டத்தில் கோவளம் மற்றும் கிழமணக்குடி இடையே சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆய்வுப் பணிகளும் தொடங்கப்பட்டன. இதனையும் அப்பகுதி மக்கள் எதிர்க்கிறார்கள். ஏற்கெனவே அமைக்கத் திட்டமிடப்பட்ட வர்த்தகத் துறைமுகத் திட்டத்தை, மாற்றுப் பெயரில் மீண்டும் தொடங்க முயற்சி செய்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தத் திட்டத்தை எதிர்ப்பதற்காகப் பல்வேறு கிராமத் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் கொண்ட போராட்டக்குழு தொடங்கப்பட்டிருக்கிறது.  

போராட்டம்

’குமரி சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம்’ என்கிற பெயரில் செயல்பட்டு வரும் அந்தப் போராட்டக் குழுவின் சார்பாக தினமும் ஒவ்வொரு கிராமத்திலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று குமரி அருகே கீழமணக்குடி கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தங்கள் பகுதியில் வர்த்தக துறைமுகத்தை அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இந்தப் போராட்டத்தில் சுமார் 4,000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.