``யார் அடிச்சுக் கேட்டாலும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க!''- தினகரனின் சுற்றுப் பயணத்தில் கலகலத்த மகளிர்

தினகரன் தனது மக்கள் சந்திப்பின் இரண்டாவது கட்ட சுற்றுப் பயணத்தை தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியிலிருந்து இன்று (10.2.2018) தொடங்கினார். அவருக்குப் பிரமாண்ட முறையில் ஏகப்பட்ட அலப்பறைகளோடு வரவேற்பு கொடுத்தனர் நிர்வாகிகள். 


அங்கு ஒரு நேரடி விசிட் அடித்தோம். புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் எதிரே உள்ள சாலையின் இருபக்கமும் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாதஸ்வரமும்,மேளமும் வாசித்தபடி தினகரனை வரவேற்க நின்றனர். இருபதுக்கும் மேற்பட்ட புரோகிதர்கள் பூரணகும்ப மரியாதை கொடுக்கக் காத்திருந்தனர்.


அலங்கரிக்கப்பட்ட யானை தினகரனுக்கு மாலை அணிவிக்கவும், நடனமாடும் குதிரைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. குதிரைகள் அவ்வப்போது வெறிக்கவும் செய்தன. யானை பக்கம் கூட்டமாகச் சென்றுவிடாதீர்கள் என எச்சரிக்கையும் செய்யப்பட்டது. யானையை, அண்ணன் பார்க்க வேண்டும் யானையை மறைக்காமல் நிற்க வேண்டும் எனக் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து சொன்னார் நிர்வாகி ஒருவர். அதேபோல், முளைப்பாரியோடு தினகரன் வரும்போது மலர் தூவி வரவேற்பதற்கும் ஏராளமான பெண்கள் கூடியிருந்தனர். காலை 8 மணிக்கே வந்தவர்களிடம் அண்ணன் 10 மணிக்கெல்லாம் வந்துவிடுவார் வரவேற்றுவிட்டு நீங்கள் சென்று விடலாம் என்றனர். ஆனால், 11.30 மணிக்கு மேல் ஆகிறது அவரை இன்னும் காணவில்லை எப்ப தம்பி வருவார் எனக் கையில் குழந்தையோடு வந்திருந்த ஒரு பெண்மணி கேட்டார்.


வயதான பாட்டி ஒருவர், ``பணம் கொடுத்திருந்த நாங்க இந்நேரம் கலைந்து சென்றிருப்போம். ஆனா  ஆர்.கே. நகரைப் போலவே இங்கும் டோக்கன் கொடுத்துட்டாங்க. அதனால் எங்கும் நகர முடியவில்லை’’ என சோர்வோடு சொல்ல, எவ்வளவு தரேன் என சொல்லியிருக்காங்க எனக் கோட்டோம், ``1,000 ரூபாய் தர்றதா சொல்லியிருக்காங்க; கைக்கு வந்தபிறகுதான் தெரியும். இருபது ரூபா டோக்கனா கொடுத்தாங்க என நாம் கேட்க பத்திரிகைக்காரங்க மட்டும் இல்லை யார் அடிச்சுக் கேட்டாலும் சொல்லக் கூடாதுன்னு சொன்னாங்க அதனால் சொல்லமாட்டேன்’’ என அப்பாவியாக வெற்றிலையை மெல்ல ஆரம்பித்தார். அந்தப் பெண்களை வழிநடத்திய மகளிர் அணி நிர்வாகி ஒருவர், ``அண்ணன் வரும் போது மலர்களை அவர் முகத்தில் வீசக் கூடாது அவருக்கு அது பிடிக்காது என்றும் அவர் நடந்து வரும் போது காலில் படும்படி வீச வேண்டும்’’ என்றார். 

ராட்சத ரோஜா மாலை ஒன்று தயார் செய்யப்பட்டு தினகரனுக்குப் போடுவதற்காக, அதை தாங்கிக்கொண்டே நீண்ட நேரமாக  நின்றவாறே காத்திருந்தனர் இருவர். அங்கே வந்த ஒரு நிர்வாகி அண்ணனுக்குக் கழுத்து வலி அதனால் இதை கழுத்தில் போடாதீர்கள் கையில் கொடுத்து விடுங்கள் என உத்தரவிட்டார். தினகரன் வந்ததும் வேனை விட்டு கீழே இறங்கி நிர்வாகிகள் ஏற்பாடு செய்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் வேனில் ஏறிச் சென்ற அவருக்கு கூடியிருந்த பெண்கள் முளைப்பாரியோடும், பூக்களை மேலே தூவியும் அழைத்துச் சென்றனர். அப்போது மூங்கிலில் பின்னபட்டக் கூடைகளில் பூக்களைக் கொடுத்திருந்தனர் நிர்வாகிகள். பூக்கள் தூவிய பிறகு அந்தக் கூடைகளை நிர்வாகி ஒருவர் வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டே சென்ற அலைப்பறைகளும் நடந்தது. ’இந்தக் கூடை என்ன  விலை இருக்கும், இவ்வளவு நேரம் நின்ன எங்களுக்கு இந்தக் கூடையைக் கூட கொடுக்க மாட்டீங்களா?’ எனக் கேட்டு நொந்துகொண்டார் ஒரு பெண். இன்னும் என்னென்ன அலப்பறைகள் கொடுக்கப் போகிறார்களோ?.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!