"அதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டார்" காரணம் சொல்லும் உறவினர்கள்

நெல்லையில், நில அளவைத் துறையில் பணியாற்றி வந்த அரசு ஊழியருக்கு சக அதிகாரிகள் டார்ச்சர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அரசு ஊழியர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில், அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக பணியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த 2011 ஆம் வருடம் டிசம்பர் 22 ஆம் தேதி அம்பாசமுத்திரம் தாசில்தாராகப் பணியாற்றிய தியாகராஜன் என்பவர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னையிலிருந்து ஆய்வுக்காக வந்திருந்த வருவாய்த்துறை அதிகாரியின் மிரட்டல் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், அந்த விவகாரம் மறக்கப்பட்டு விட்டது.

கடந்த 2014 ஆம் வருடம் பிப்ரவரி 20 ஆம் தேதி வேளாண் பொறியாளரான முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண்மைத் துறையில் காலியாக இருந்த 16 டிரைவர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்களிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொடுக்குமாறு மேலிடத்திலிருந்து கொடுத்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல், அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அந்தத் துறையின் அப்போதைய அமைச்சர், துறையின் செயலாளர், உதவியாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, நெல்லையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, உயரதிகாரி ஒருவர் திட்டியதால் ஏற்பட்ட பயத்தில், பெண் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்ட அவர், உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அரசு பணியாளர்களுக்கு இத்தகைய நெருக்கடிகள் ஏற்படுவதற்கு அரசு ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.  

டார்ச்சர்- தற்கொலைஇந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நெல்லை நில அளவைத் துறையில் வரைவாளராகப் பணியாற்றி வந்த முத்துமாலை என்பவர் தற்போது தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அவரது குடும்பத்தினர் கூறுகையில், ''முத்துமாலை யாரிடமும் அதிர்ந்து பேசாதவர். அவருக்குக் கடந்த 3 நாட்களாக அதிகாரிகளால் பெரும் டார்ச்சர் இருந்தது. இதுபற்றி அவரது மனைவி கோமதியிடமும் சொல்லி புலம்பியிருக்கிறார்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமான முத்துமாலைக்கு நீண்ட காலத்துக்குப் பின்னர் 3 மாதங்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது. அதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்.

ஆனால், அதிகாரிகள் கொடுத்த மன அழுத்தம் காரணமாக தற்போது வேட்டியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது மரணத்துக்குக் காரணமாக அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சொல்லிக் கதறினார்கள். 

கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர், சம்பவத்தன்று காலை வழக்கம்போல எழுந்து மனைவிக்கு உதவி செய்துள்ளார். பின்னர் மாடிக்குச் சென்றுவிட்டு வருவதாகச் சென்ற அவர், அங்கு தூக்கு மாட்டித் தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!