வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (10/02/2018)

கடைசி தொடர்பு:22:30 (10/02/2018)

``அரசு மருத்துவமனை குப்பைத் தொட்டியில் குழந்தையை வீசிச் சென்ற தாய்!’’ - அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்

அரசு மருத்துவ மனையில், பிறந்த அரை நேரத்தில்,  ஆண்குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகளை குப்பை தொட்டிகளில்  வீசும் சம்பவம் அதிகரித்துள்ளது.

                           

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர் ஒருவர் புற நோயாளிகள் பிரிவு அருகில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகளை எடுத்தபோது, அதில் எவ்வித சப்தம் இல்லாமல் பிறந்த அரை மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்ததைப் பார்த்திருக்கிறார். இதுகுறித்து செவலியர்களிடமும், மருத்துவமனைப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடமும் அவர் தெரிவித்தார்.

                      

உடனடியாக குழந்தையை மீட்ட செவிலியர்கள், முதலுதவி செய்தனர். பின்னர், குழந்தையின் தயார் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் உள்ள பெண்கள் அனைவரும் குழந்தையுடன் இருப்பது தெரியவந்தது. இதனால், பிரசவ வார்டில் பிரசவிக்கவில்லை என்பதை உறுதி செய்திருக்கின்றனர். புறநோயாளிகள் பிரிவு அருகில் உள்ள கழிப்பறையில் குழந்தையை பிரசவித்துவிட்டு, அதன் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குழந்தையை வீசிவிட்டு சென்றுள்ளனர். குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற பெண் யார் என்பது குறித்து மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் விசாரித்து வருகின்றனர். வறுமையில் விடப்பட்டதா. தவறான வழியில் பிறந்ததால் விடப்பட்டதா எனவும் விசாரித்து வருகின்றனர். இதேபோல், கடந்த மாதம் அரியலூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் பிறந்து 7 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, உயிருடன் கண்டெடுக்கப்பட்டு மாவட்ட தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.