வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (10/02/2018)

கடைசி தொடர்பு:23:30 (10/02/2018)

``மகனின் உடலை பார்க்க முடியாத துயரத்தில் மண்டபம் வந்த மீனவர்!’’ - கண்ணீருடன் அழைத்து சென்ற உறவினர்கள்

மகனின் உடலை பார்க்க முடியாத துயரத்தில் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மண்டபத்திற்கு வந்துசேர்ந்த மீனவர் ஜெயசீலன் கதறி அழுதது, பலரையும் கண்கலங்கச் செய்தது.

மீனவர் ஜெயசீலனை கண்டவுடன் கண்ணீர் சிந்திய உறவினர்கள்

மண்டபத்தில் இருந்து கடந்த மாதம் 14-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஜெயசீலன், சீனி இப்ராகிம்ஷா, முனியசாமி, பாலகுமார் ஆகிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இலங்கை நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் மீனவர்கள் நால்வரும் அடைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர் 3 பேர்

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி மீனவர் ஜெயசீலனின் மகன் ஸ்டீபன் உடல் நலக் குறைவினால் உயிரிழந்தார். இதையடுத்து மகனின் முகத்தை இறுதியாக பார்க்கவும், ஸ்டீபனுக்கு இறுதி காரியங்கள் செய்யவும் மீனவர் ஜெயசீலனை விடுவிக்கும்படி அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் ஜெயசீலனை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.  இதன் காரணமாக மீனவர் ஜெயசீலனுடன் அவருடன் பிடிபட்ட 3 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு பரிந்துரை செய்தது. இதையடுத்து, ஜெயசீலன் உள்ளிட்ட 4 மீனவர்களும் இலங்கைச் சிறையில் இருந்து நேற்று (9.2.2018) விடுவிக்கப்பட்டனர். 

விடுவிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரான பாலகுமார் என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் அங்கிருந்து இந்தியாவிற்கு வர மறுத்துவிட்டார். இதனால் ஜெயசீலன் உள்ளிட்ட 3 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர், இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் 3 பேரும் இன்று (10.2.2018) மாலை மண்டபம் கடலோரக் காவல் படை நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

இதனிடையே உயிரிழந்த ஸ்டீபனின் உடல் அவரது தந்தை ஜெயசீலன் இல்லாத நிலையில் நேற்று பாம்பனில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் இன்று மண்டபத்திற்கு விடுதலையாகி வந்த ஜெயசீலனை அழைத்துச்செல்ல வந்திருந்த அவரது உறவினர்கள், ஜெயசீலனை கண்டதும் கண்ணீர் விட்டு கதறினர். ஜெயசீலனும் தனது மகனின் முகத்தை கூட பார்க்க முடியாமல் போய் விட்டதே என கூறியபடி முகத்தில் அடித்து கொண்டு கண்ணீர் சிந்தினார். ஜெயசீலனின் நிலை அங்கு கூடியிருந்த மீனவர்களையும், அதிகாரிகளையும் கண்கலங்க வைத்தது.