வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (10/02/2018)

கடைசி தொடர்பு:21:56 (10/02/2018)

``கழுத்தை நெரித்த கடன் தொல்லை’’ - விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நெல்லை விவசாயி!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், விவசாயத் தேவைகளுக்காக வாங்கிய கடன் சுமையைத் தாங்க முடியாத காரணத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயி கிருஷ்ணன்

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்குபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணன். விவசாயியான இவருக்கு சுமார் 3 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி காளியம்மாள். இவர்களது 3 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இதனால், தனியாக வசித்து வந்த கிருஷ்ணனும் காளியம்மாளும் விவசாயத்தைக் கவனித்து வருகிறார்கள்.

மானூர் வட்டாரத்தில் கடந்த 2 வருடங்களாக பருவமழை பொய்த்ததால், கிருஷ்ணனுக்கு விவசாயத்தில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. அதனால் 2 வருடங்களாக கூட்டுறவு வங்கியில் ரூ.1 லட்சம் கடனும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, முன்னோடி வங்கி ஆகியவற்றில் ரூ.1.50 லட்சம் கடனும் வாங்கியிருந்தார். இதுதவிர, தனியாரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். 

கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் இந்த வருடம் பருவமழை சரியான நேரத்தில் பெய்ததால் 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டார். ஆனால், குளத்தில் தண்ணீர் குறைந்து விட்டதால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன், நெல் பயிருக்கு உரம் வைக்கவும், பூச்சி மருந்து தெளிக்கவும் வேண்டிய நிலைமை உருவானது. கையில் இருந்த பணம் அனைத்தும் கரைந்துபோன நிலையில், அவசரத் தேவைக்கு பணம் புரட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. விவசாயத் தேவைக்கு வாங்கிய கடனுக்கான வட்டியைச் செலுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டது.

அத்துடன், குளத்தில் தண்ணீர் வேகமாக வற்றியதால் கடைசி நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல், அதற்காக பெரும் தொகையைச் செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் ஆபத்து இருந்தது. இதனால் கடந்த சில தினங்களாகவே கிருஷ்ணன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அவரை மனைவி காளியம்மாள் தேற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில், இன்று (10.2.2018) ரெட்டியார்பட்டி கிராமத்துக்குச் சென்று பயிருக்குத் தெளிப்பதற்காக பூச்சிமருந்துகளை வாங்கி வருவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு கிருஷ்ணன் சென்றுள்ளார்.

ஆனால், பூச்சி மருந்து வாங்கி வரும் வழியிலேயே அதைக் குடித்து, கிருஷ்ணன் மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணனின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு,  சிகிச்சைக்காக அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன், மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து மானூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். கடன் காரணமாக விவசாயி ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.