வெளியிடப்பட்ட நேரம்: 21:32 (10/02/2018)

கடைசி தொடர்பு:21:34 (10/02/2018)

''ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் வெளியே வரும் நாள்'' - ஆரூடம் கூறிய தினகரன்

’’கடந்த 2001-ல் வைத்திலிங்கம் எம்.எல்.ஏவாக போட்டியிட்டபோது அவரின் சொத்துமதிப்பு எவ்வளவு?. இப்போது அவருக்கு எவ்வளவு சொத்து மதிப்பிருக்கிறது?. எங்களுக்கு துரோகம் செய்த அவர், இருக்கிற இடம் தெரியாமல் போய் விடுவார்’’ என தினகரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினகரன் தனது இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை தஞ்சாவூரில் இன்று (10.2.2018) தொடங்கினார். முன்னதாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் தினகரன். பின்னர், ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளுக்காக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலதிட்ட உதவிகளை வழங்கினார். குக்கர், கிரைண்டர், மிக்ஸி,சைக்கிள், கறவை மாடு போன்றவைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. பெரும்பாலும் குக்கர்தான் கொடுக்கப்பட்டது. ’’வர இருக்கிற தேர்தல்களில் குக்கர் சின்னம் தான் கேட்க இருக்கிறோம். அதனால்தான் என தினகரன் ஆதரவாளர்கள் விளக்கம் சொன்னார்கள்.

பின்னர் பேசிய தினகரன், ``டெல்டா பகுதிதான் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகிறது. இங்கு விவசாயம்தான் முக்கியத் தொழிலாக உள்ளது. இந்த மண்ணையும் மக்களையும் பாதிக்கிற வகையில் ஒ.என்.ஜி.சி. மூலம் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கக் குழாய்கள் பதித்து விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். ஜெயலலிதா இருந்த வரை இதுபோன்ற திட்டங்களை எதிர்த்தார். இப்போது இருக்கிற 33 பேரும் பதவியில் இருந்தால் போது என நினைக்கிறார்கள். மக்களைப் பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை.
தமிழகத்தில் நிதி இல்லை என்கிறார்கள். ஆனால் எம்.எல்.ஏக்களின்  சம்பளத்தை அவர்கள் கேட்காமலேயே உயர்த்தியதற்குக் காரணம், அவர்கள் இருந்தால்தான் இந்த ஆட்சி தொடரும் என்பதால். தமிழகத்தில் தற்போது உள்ள ஆட்சி பி.ஜே.பியின் கிளை நிறுவனமாகவே செயல்படுகிறது. சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் ஆட்சியாளர்களோடு சேர்ந்துகொண்டு அதிகாரிகளும் தவறான நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் நிச்சயம் பதில் சொல்லும் காலம் வரும்.

ஓ.பி.எஸ். நடத்திய தர்மயுத்தம் ஒரு டுபாக்கூர் யத்தம். அது பதவி பெறுவதற்காகவே நடத்தப்பட்டது. குடும்ப அரசியல் என சொல்லும் ஓ.பி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலபேர் இன்றைக்கு பதவியில் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. சீட் வாங்கிக் கொடுத்தது யார் என அவருக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். கடந்த 2001-ல் அவர் தேர்தலில் போட்டியிடும்போது அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு? இப்போது எவ்வளவு?. அப்போது எப்படி இருந்தார்?. இப்போது எப்படி இருக்கிறார்?. வரும் காலத்தில் இவர் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவார். இன்னும் 3 மாதத்திற்குள் அந்த ஆட்சி முடிந்து விடும். ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வெளியே வருவார்கள்’’ என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க