வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (11/02/2018)

கடைசி தொடர்பு:16:16 (09/07/2018)

ராமநாதபுரத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 694 வழக்குகளுக்குத் தீர்வு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 694 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டதன் மூலம் தீர்வுத்தொகையாக ரூ.2,10,14,813 பாதிக்கப்பட்ட  பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு தொகை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) கூடுதல் மாவட்ட நீதிபதி த.லிங்கேசுவரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் மொத்தம் 24 அமர்வுகள் நடந்தன. இதில் ஒரே நாளில் 1,185 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 695 வழக்குகளுக்கும் சமரசம் செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் வங்கி வராக்கடன் தொடர்பான வழக்குகள் 331 விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் 49 வழக்குகளும்,மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 77 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 28 வழக்குகளும் சமரசம் செய்யது வைக்கப்பட்டன.

சிவில் மற்றும் காசோலை மோசடி வழக்குகள் 83 எடுத்துக் கொள்ளப்பட்டு 17 வழக்குகளும், சிறு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் 610 விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் 600 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம் மொத்தம் ரூ.2,10,14,813 தீர்வுத்தொகையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத் துவக்க விழாவில் தலைமைக் குற்றவியல் நீதிபதி டி.வி.அனில்குமார், சார்பு நீதிபதி எம்.பிரீத்தா, நீதிபதி.ஜி.இசக்கியப்பன்,கே.எஸ்.ராஜேஷ்குமார், வழக்குரைஞர்கள் நம்புநாயகம், ஓ.உஷாதேவி, எம்.ராஜேஸ்வரி, ஆர்.அஜய்குமார், ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.