பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை காங்கிரஸார் பக்கோடா விற்பனை!

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரி அணியின் சார்பாக பக்கோடா தயாரித்து விற்பனை செய்யும் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

காங்கிரஸ் எதிர்ப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய பிரதமர் மோடி, ‘பக்கோடா தயாரித்து விற்பனை செய்வதும் ஒரு வேலை வாய்ப்பு தான். அந்தத் தொழில் செய்பவர்கள் நாளொன்றுக்கு 200 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அதனால் அதனையும் நாம் ஒரு வேலை வாய்ப்பாகவே கருத வேண்டும்’ எனத் தெரிவித்து இருந்தார். பிரதமரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. எதிர்க்கட்சியினர் இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பக்கோடா தயாரித்து விற்பனை செய்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரி அணியின் சார்பாக பக்கோடா தயாரித்து விற்பனை செய்யும் போராட்டம் நடத்தப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சி அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அங்கேயே அடுப்பை மூட்டி பக்கோடா தயாரித்தனர். பின்னர் அவற்றை அந்த வழியாகச் சென்றவர்களுக்கு விற்பனை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ’பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பேசுகையில், தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், படித்த இளைஞர்களை அவமதிக்கும் வகையில் பக்கோடா விற்பனை செய்யுமாறு கூறி உள்ளார். இது நாடுமுழுவதும் உள்ள படித்த இளைஞர்களுக்கு பெரும் அவமானத்தை கொடுத்திருக்கிறது என்பதை ஆட்சியாளர்களுக்குப் புரிய வைக்கும் வகையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றார்கள். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!