பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு பட்டை நாமம்!- முன்னாள் மாணவர்கள் தவிப்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி நடத்த வேண்டிய பட்டமளிப்பு விழா இன்னும் நடைபெறாததால் கடந்த ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள் இன்னும் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இதுபற்றி முன்னாள் மாணவர்களிடம் பேசிய போது, ''பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17-ம் தேதி பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைப்பெறுவது வழக்கம். இந்த தினத்தை ஆளுநர் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கென்றே ஒதுக்கி வைத்து விடுவார். ஆனால் கடந்த 2 வருடங்களாக முறையாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் காலம் தாழ்த்தி நடத்துகிறார்கள்.

கடந்த மே மாதத்தோடு நாங்கள் கல்லூரி படிப்பை  முடித்து ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. செப்டம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடத்தி எங்களுக்கு பட்டங்கள் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் இன்னும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் வந்து ஒரு மாதம் கடந்த பிறகும் இன்னும் பட்டமளிப்பு விழாவிற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பட்டமளிப்பு விழா நடத்தப்படுமென்றால் இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த முடியும். ஏனெனில், மார்ச், ஏப்ரல், மே போன்ற மாதங்களில் தேர்வுகள் நடைபெறும். அப்போது பட்டமளிப்பு விழா நடத்த முடியாது. அதனால் இந்த மாதம் பட்டமளிப்பு விழா நடத்தி எங்களுக்கு பட்டங்கள் வழங்க வேண்டும்'' என்றார்கள்.

இதுபற்றி பல்கலைக்கழகம் தரப்பில் விசாரித்த போது, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் தினந்தோறும் வெளிவந்த வண்ணம் இருப்பதால் ஆளுநர் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீதும் பல்கலைக்கழக நிர்வாகிகள் மீதும் மிகுந்த கோபத்தில் உள்ளார். எனவே, துணைவேந்தர் ஆளுநரை சந்திப்பதை தவிர்க்கவே பட்டமளிப்பு விழாவினை தள்ளிப்போடுவதாக தெரிவித்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!