மருத்துவமனையிலும் ரஜினிக்காக உழைத்த திருச்சி ரஜினி ரசிகர் மன்ற தலைவரின் இறப்புக்கு ரஜினி இரங்கல்!

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவமனையில் இருந்தபடியே ரஜினி மக்கள் மன்றத்துக்காக உழைத்த திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவரின் இறப்புக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஜினி ரசிகர்

ரஜினி சினிமாவுக்கு வந்த காலத்தில் இருந்து அவரின் தீவிர ரசிகரான சாகுல் அமீது, ரஜினி  மன்றத்தில் இணைந்தார். கடந்த  35 வருடங்களாக ரஜினி மன்ற மாவட்ட தலைவராக இருந்துவரும் இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி அடைக்கலராஜுக்கு மிகவும் நெருக்கமானவராக வலம்வந்தார். கடந்த சில வருடங்களாகவே ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என அவரின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதிலும் திருச்சி ரசிகர் போஸ்டர்கள் அடித்து அதகளப்படுத்தினர். அதில் சாகுல் அமீதும்  ஒருவர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ரஜினி மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டபோதும் இவரே மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்டார். அவர் தலைமையில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கை மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர் சேர்க்கையில் திருச்சி ரசிகர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சாகுல் ஹமீது, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த சில வாரங்களாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  தொடர்ந்து அவருக்கு இதய நோய் தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. கடந்தவாரம் அவருக்கு இதய அறுவை சிகிச்சை முடிந்தது. பிறகு மெல்ல மெல்ல உடல் சீராகி வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே, ரஜினி மன்ற நிர்வாகிகளை வேலைவாங்கி வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் களப்பணியில் கலக்கும் சாகுல் அமீதுக்கு கடந்த 3-ம் தேதி போன் செய்த ரஜினிகாந்த், சாகுல் அமீது மற்றும் அவரது குடும்பத்தாரிடம் நீண்டநேரம் பேசினார். அதேபோல் சாகுலுக்கு ஒன்றும் ஆகாது தான் வணங்கும் கடவுளும், சாகுலின் நம்பிக்கையாக விளங்கும் அல்லாவும் ஒன்றும் ஆகாமல் காப்பார் என்று  ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சாகுல் அமீதுவின் உடல்நலம் சீராகி வருவதாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அவரது ரசிகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை, சாகுல்அமீதுக்கு ஏற்பட்ட தீடீர் உடல்நலக்குறைவால் சிகிச்சைபலனின்றி மரணமடைந்தார். அதனையடுத்து அவரின் உடலுக்கு ரஜினி ரசிகர்கள், மன்ற முன்னணி நிர்வாகிகள் திரண்டு வந்து மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி மன்ற கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

ரஜினி

இந்நிலையில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ரஜினியின் தீவிர விசுவாசியாக, ரசிகராக வலம் வந்த சாகுல் அமீதுவின் மரணத்துக்கு ரஜினி நேரில் வருவாரா என்கிற எதிர்பார்ப்பு திருச்சி மக்களிடையே நிலவியது. சாகுல் அமீது மரணச் செய்தி ரஜினிகாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த், "திருச்சி மாவட்ட ரஜினி மன்றத் தலைவராக கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்ட சாகுல் ஹமீது அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரது ரசிகர் மன்றப் பணிகள் என்றும் நம் நினைவை விட்டு அகலாதவை. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரஜினியின் காலா திரைப்பட வெளியீட்டு நாள் குறித்த முக்கியமான பணிகளில் ரஜினி நேரில் இருக்க வேண்டிய கட்டாயம் என்பதால், சாகுல் அமீதின் மரணத்துக்கு நேரில் வர முடியவில்லை. அவர் வந்தால் தேவையில்லாத நெரிசல்கள் அதிகமாகும் என்பதால் நல்லபடியாக அடக்கம் செய்திட எங்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்” என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!