ஜல்லிக்கட்டில் அமைச்சரின் 'கொம்பன்' மரணம்! | Minister's bull death in the Jallikattu

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (11/02/2018)

கடைசி தொடர்பு:14:35 (11/02/2018)

ஜல்லிக்கட்டில் அமைச்சரின் 'கொம்பன்' மரணம்! 

புதுக்கோட்டை மாவட்டம்  தென்னலூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வளர்ப்புக் காளையான 'கொம்பன், மரணமடைந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் இன்று காலையில் ஜல்லிக்கட்டுத் தொடங்கியது. சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான காளைகள் இதில் கலந்துக்கொண்டன. அது போலவே, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வளர்ப்புக்காளைகளான, கொம்பன், செவளை, உள்ளிட்ட நான்கு காளைகள் கலந்துக்கொண்டன. இதில்,கொம்பன் காளை மீது அமைச்சருக்கு தனிபிரியம் உண்டு. அதனை தனி கவனம் எடுத்து வளர்த்து வந்தார். கொம்பனும் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு பிடி படாத மாடாக விளையாடி அமைச்சருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமான ஜல்லிக்கட்டுகளிலும் கொம்பன் தவறாமல் இடம் பெற்று விடும். அந்த வகையில், இன்று தென்னலூர் ஜல்லிக்கட்டிலும் கலந்துக்கொண்டது. 'அமைச்சரோட செல்லப்பிள்ளை கொம்பன் களத்துக்கு வர்றான். பிடிபடாத இந்தக்காளையைப் பிடித்தால், அமைச்சர் சார்பில் தங்கக் காசு பரிசு' என்று அறிவிப்பாளர் மைக்கில் சொல்ல  பெரும் ஆரவாரத்தோடு கொம்பன் அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலைவிட்டு சீறிப்பாய்ந்த கொம்பன், முழு ஆக்ரோசத்தோடு பாய, மாடு பிடி வீரர்கள் சட்டென்று விலக, அருகில் இருந்த கல்தூண் மீது கொம்பன் தலை நேரடியாக மோதியது. அதில்நிலைகுலைந்த கொம்பன் சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்தது.

அமைச்சரின் ஆட்கள் உடனடியாக டிராக்டரில் அந்தக்காளையை தூக்கி போட்டுக்கொண்டு சிகிச்சைக்காக விரைந்தார்கள். ஆனால்,போகும் வழியிலேயே கொம்பன் பரிதாபமாக இறந்தது. விஷயம் கேள்விப்பட்டு அமைச்சர் மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதுபற்றி அமைச்சரின் உதவியாளர் வெங்கடேசனைத் தொடர்புக் கொண்டு பேசினோம்.  "முழு பலத்துடன் கல்தூணில் மோதியதால் நேரடியாக அதன் மூளையை பாதித்து மரணமடைந்து விட்டது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அமைச்சர் கொம்பனை தனது சொந்தப் பிள்ளைபோல் அக்கறைக்காட்டி வளர்த்து வந்தார். அவருக்கு கொம்பன் என்றால் கொள்ளைப் பிரியம். கொம்பனுக்கு  முறைப்படி ஈமசடங்குகள் செய்து, அமைச்சரின் தோட்டத்திலேயே அந்தக்காளை புதைக்கப்படுகிறது" என்றார் வருத்தம் கொண்ட குரலில்.


 


[X] Close

[X] Close